பாகிஸ்தான் - இந்தியா எக்ஸ் தளம்
இந்தியா

பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து அதிரடி காட்டும் இந்தியா.. ஒரேநாளில் 3 தடை!

பாகிஸ்தானில் இருந்து அஞ்சல்கள் மற்றும் பார்சல்களின் பரிமாற்றத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தபால் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

Prakash J

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்துள்ளது.

pak. ship

மேலும், பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரிலேயே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவுகிறது. தவிர, இருதரப்பிலும் மாறிமாறி கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அடுத்த நடவடிக்கையாக இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதேபோன்று இந்திய கொடி ஏந்திய எந்த கப்பல்களும் பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்லவும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது. இதையடுத்து, மற்றொரு நடவடிக்கையாக, பாகிஸ்தானில் இருந்து அஞ்சல்கள் மற்றும் பார்சல்களின் பரிமாற்றத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தபால் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து வான்வழி மற்றும் தரைவழி மூலம் அனைத்து வகையான அஞ்சல்கள் மற்றும் பார்சல்களில் பரிமாற்றம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிரான மற்றொரு கடுமையான நடவடிக்கையாக, அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களையும் இந்தியா தடை செய்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கையின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, 450 கி.மீ. தூரம்வரை சென்று தாக்கும் ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதித்திருப்பது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்தாலி ஆயுத அமைப்பு என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை, பயிற்சி INDUSஇன் ஒரு பகுதியாக ஏவப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.