சுதந்திரம் அடைந்த காலம் தொட்டே இந்தியாவும், ரஷ்யாவும் நெருங்கிய நட்புறவை கடைப்பிடித்து வருகின்றன. இதன் காரணமாகவே, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் போர் தொடுத்தபோதும் இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியது. மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்குப் பதிலளிக்கும் விதமாக, அந்நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தபோது, ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. 2022 பிப்ரவரி முதல் வெறும் 0.2 சதவீதத்திலிருந்து அதிகரித்து சமீபத்திய மாதங்கள் வரை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தற்போதைய கணக்குப்படி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் 35 சதவிகிதம் ரஷ்யாவிடம் இருந்து பெறப்படுகிறது. ஆனால் இது மாதத்திற்கு மாதம் மாறுபடும். இந்தியா, கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்காமல் இருந்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை 200 டாலரைத் தாண்டி இருக்கும். இதனால், உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டிருக்கும். இந்தியாவின் இந்த முடிவால்தான் சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் ஏற்றம் தடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈராக், குவைத், அமெரிக்கா ஆகிய நாடுகளும் இந்தியாவிற்கு, கச்சா எண்ணெயை விநியோகம் செய்கின்றன
ரஷ்யா தலைமையிலான யூரேசிய பொருளாதார ஒன்றியத்துடன், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. மேலும், ரஷ்யாவுடனான முதலீட்டு ஒப்பந்தத்தில் முன்னேற்றம் காணவும் முயன்று வருகிறது. இதன்மூலம் இந்தியா - ரஷ்யா இடையிலான இருதரப்பு வர்த்தகம் மேலும் பெருகி வருகிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்களில் மருந்துகள், இதர உற்பத்திகள், இரும்பு மற்றும் எஃகு, ஆடைகள், தேநீர், காபி மற்றும் புகையிலை ஆகியவை அடங்கும். ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முக்கிய பொருட்களில் பாதுகாப்பு உபகரணங்கள், அணுசக்தி உபகரணங்கள், உரங்கள், மின் இயந்திரங்கள், இரும்புகள் மற்றும் வைரங்கள் ஆகியவை அடங்கும்.
இந்த நிலையில், “ரஷ்யா மற்றும் இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் நடப்பாண்டில் 66 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது” என ரஷ்ய தூதரகத்தின் மாக்சிம் வி.கோஸ்லோவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ““ரஷ்யா மற்றும் இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் நடப்பாண்டில் 66 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. நடப்பாண்டின் முதல் எட்டு மாதங்களில் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், ரஷ்யாவும் இந்தியாவும் 2030ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக இலக்கை அடைவதற்கான பாதையில் இருக்கிறது. அவை, விரிவாக்கப்பட்ட ஒத்துழைப்புகள் மற்றும் பல்வகைப்பட்ட வர்த்தக வாய்ப்புகள் மூலம் மேம்படுத்தப்பட்டதாக உள்ளன. இந்தியாவும் ரஷ்யாவும் அனைத்துத் துறையிலும் நெருங்கிய நண்பர்கள். இந்தப் பிணைப்பு என்பது பரஸ்பர நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட நலன்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது, பொருளாதார உறவுகளின் வளர்ச்சியை இயற்கையாகவும் நீடித்ததாகவும் ஆக்குகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த மாதம் தொடக்கத்தில் மும்பையில் நடைபெற்ற இந்தியா-ரஷ்யா வர்த்தக மன்றத்தில் உரையாற்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் இதே கருத்தைத் தெரிவித்திருந்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும் அவர் எடுத்துக் காட்டியிருந்தார்.