சுதந்திரம் அடைந்த காலம்தொட்டே இந்தியாவும், ரஷ்யாவும் நெருங்கிய நட்புறவை கடைப்பிடித்து வருகின்றன. இதன் காரணமாகவே, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் போர் தொடுத்தபோதும் இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தியது. மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்குப் பதிலளிக்கும் விதமாக, அந்நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இந்த தடையால், ரஷ்யா தன் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை, பிற நாடுகளுக்குக் குறைந்த விலைக்கு விற்க முன்வந்தது. மேற்கத்திய நாடுகளின் இந்தப் பொருளாதாரத் தடையை மீறி ரஷ்யாவுடன் இந்தியா வர்த்தகத்தில் ஈடுபட்டது. ஆம், அதை நல்லதொரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட இந்தியா, அன்றுமுதல் ரஷ்யாவிடமிருந்து அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இருந்து வருகிறது.
2022 பிப்ரவரியில் வெறும் 0.2 சதவீதமாக இருந்த இந்த புள்ளிவிவரம் தற்போதைய கணக்குப்படி 35 சதவிகிதமாக உள்ளது. இதன்மூலம், சீனாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஆனால் இது மாதத்திற்கு மாதம் மாறுபடும். இந்தியா, கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்காமல் இருந்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை 200 டாலரைத் தாண்டி இருக்கும். இதனால், உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டிருக்கும். இந்தியாவின் இந்த முடிவால்தான் சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் ஏற்றம் தடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈராக், குவைத், அமெரிக்கா ஆகிய நாடுகளும் இந்தியாவிற்கு, கச்சா எண்ணெய்யை விநியோகம் செய்கின்றன.
இந்த நிலையில், இந்தியாவின் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. ரஷ்யாவிடமிருந்து ரிலையன்ஸ் மற்றும் நயாரா எனர்ஜி என்ற இரண்டு தனியார் நிறுவனங்கள் பெருமளவில் கச்சா எண்ணெய்யைப் பெற்று வருகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும், ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி லாபம் ஈட்டி வருகின்றன. இந்தச் சூழலில்தான், ரஷ்ய அரசுக்குச் சொந்தமான Rosneft நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒருநாளைக்கு 5 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இது, இந்த இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை இல்லாத மிகப்பெரிய எரிசக்தி ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் 13 பில்லியன் டாலர் (ரூ1.1 லட்சம் கோடி) மதிப்பிலான இந்த திட்டம், பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவிற்கு ஒரு நிலையான வருவாயை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் முகேஷ் அம்பானியின் டாலர் 200 பில்லியன் குழுமமான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் ஊக்கமளிக்கிறது. கடந்த ஆண்டு மத்தியில் மட்டும் இந்த வர்த்தகத்தின் மூலம், ரிலையன்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட ரூ.44,000 கோடி லாபம் ஈட்டியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், ரஷ்யாவிடமிருந்து வேறு நிறுவனங்களும் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தாலும் அவை பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் எரிசக்தி சந்தைகளில் ஒன்றாக இருப்பதாலும், உலகத் தேவையில், குறிப்பாக சீனாவின் வளர்ச்சி குறைந்து வருவதாலும், எண்ணெய் உற்பத்தியாளர்களிடையே ஒரு பங்குக்கான போட்டி தீவிரமடைந்து வருகிறது. உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளர் மற்றும் நுகர்வோர் இந்தியா, 2022இல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக மேற்கத்திய நாடுகள் அதை வாங்குவதை நிறுத்திய பின்னர், கடல்வழி ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதில் முன்னணியில் உள்ளது.