இந்தியாவில் முறையான மருத்துவக் கவனிப்பு மற்றும் தகுதியான மருத்துவர்களின் சிகிச்சையின்றி நிகழும் மரணங்களின் எண்ணிக்கை கடந்த 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிரடியாக அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய 'மாதிரிப் பதிவு முறை' அறிக்கையின்படி, 2024இல் பதிவான மொத்த மரணங்களில் கிட்டத்தட்ட 45.5 சதவீத மரணங்கள் எந்தவித முறையான மருத்துவ உதவியுமின்றி நிகழ்ந்துள்ளன. இது 2020ஆம் ஆண்டில் இருந்த 18 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
கிராமப்புறங்களில் மருத்துவ உதவியில்லாத மரணங்கள் 48.9 சதவீதமாக அதிகரித்துள்ளன. நகர்ப்புறங்களில் முறையான மருத்துவச் சிகிச்சையின்றி நிகழ்ந்த மரணங்கள் 36.1 சதவீதம் ஆகும். மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்ட பின்னரும் இந்த நிலை நீடிப்பது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மாநில வாரியான புள்ளிவிவரங்களின்படி, பிகாரில் அதிகபட்சமாக 67.8 சதவீதமும், கேரளத்தில் மிகக் குறைவாக 26.8 சதவீதமும் மருத்துவ கவனிப்பின்றி நிகழ்ந்த மரணங்களாகப் பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் மருத்துவக் கவனிப்பற்ற மரணங்களின் விகிதம் 46 சதவீதமாகப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கிராமப்புறங்களில் இந்தப் பாதிப்பு நகர்ப்புறங்களைவிட மிக அதிகமாக உள்ளது. 2024ஆம் ஆண்டு பதிவான மொத்த மரணங்களில் 24.7 சதவீத மரணங்கள் அரசு மருத்துவமனைகளில் நடந்துள்ளன. தகுதியான மருத்துவ வல்லுநர்கள் பற்றாக்குறை மற்றும் சுகாதாரச் சமநிலையின்மையே இதற்கு முக்கியக் காரணம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.