பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குஜ்தார் மாவட்டத்தில், ராணுவ வீரர்களின் குழந்தைகள் பயிலும் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்தைக் குறிவைத்து இன்று காலை தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 38 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த பாதுகாப்புப்படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பலூச் விடுதலை இராணுவம் (BLA) என்ற கிளர்ச்சிக் குழுவுக்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே அடிக்கடி மோதல் நிலவி வருகிறது. அந்த அமைப்பு இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. அதேவேளை, இந்த தாக்குதல் பின்னணியில் இந்தியா உள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த தாக்குதல் இந்தியாவால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. அப்பாவி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் போன்ற மென்மையான இலக்குகளுக்கு எதிராக பாகிஸ்தானில் பயங்கரவாதத்தைத் தூண்டுவதற்கு இந்திய பயங்கரவாத முகவர்கள் இந்தியாவால் பயன்படுத்தப்படுகிறார்கள்" என அது தெரிவித்துள்ளது.
மறுபுறம் இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை இந்தியா ஆதரிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம்சாட்டி இருந்தார். அவர், "இந்திய ஆதரவின் கீழ் செயல்படும் பயங்கரவாதிகள் பள்ளிப் பேருந்தில் அப்பாவி குழந்தைகளைத் தாக்குவது அவர்களின் விரோதப் போக்கிற்கு தெளிவான சான்றாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இன்று அதிகாலை குஜ்தாரில் நடந்த சம்பவத்தில் இந்தியாவின் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரிக்கிறது. இதுபோன்ற அனைத்து சம்பவங்களிலும் உயிரிழந்தவர்களுக்கு இந்தியா இரங்கல் தெரிவிக்கிறது.
பயங்கரவாதத்தின் உலகளாவிய மையமாக அதன் நற்பெயரிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவும், அதன் சொந்த தோல்விகளை மறைக்கவும், அதன் அனைத்து உள்நாட்டுப் பிரச்னைகளுக்கும் இந்தியாவைக் குறைகூறுவது பாகிஸ்தானின் இயல்பான செயலாகிவிட்டது. உலகை ஏமாற்றும் இந்த முயற்சி தோல்வியடையும்” எனத் தெரிவித்துள்ளார்.