பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர் எக்ஸ் தளம்
இந்தியா

காஷ்மீர் குறித்து சர்ச்சையாக பேசிய பாகிஸ்தான் ராணுவத் தலைவர்.. பதிலடி கொடுத்த இந்தியா!

ஜம்மு - காஷ்மீர் இஸ்லாமாபாத்தின் கழுத்து நரம்பு என்று கூறிய பாகிஸ்தான் ராணுவத் தலைவரின் கருத்துக்கு இந்தியா எதிர்வியாற்றி உள்ளது.

Prakash J

வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர்களின் கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனீர், "நீங்கள் நிச்சயமாக உங்கள் குழந்தைகளுக்கு பாகிஸ்தானின் கதையைச் சொல்ல வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நாம் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்று நம் முன்னோர்கள் நினைத்தார்கள். நமது மதங்கள், பழக்கவழக்கங்கள், மரபுகள், எண்ணங்கள் மற்றும் லட்சியங்கள் வேறுபட்டவை. அதுதான் இரு தேசக் கோட்பாட்டின் அடித்தளமாக அமைந்தது. நாம் ஒரே தேசம் அல்ல. அதனால்தான் நமது முன்னோர்கள் இந்த நாட்டை உருவாக்க போராடினர்.

நமது முன்னோர்களும் நாமும் இந்த நாட்டை உருவாக்க நிறைய தியாகம் செய்துள்ளோம். அதை எப்படிப் பாதுகாப்பது என்று நமக்குத் தெரியும். என் அன்பான சகோதர சகோதரிகளே, மகள்களே, மகன்களே, தயவுசெய்து பாகிஸ்தானின் இந்தக் கதையை மறந்துவிடாதீர்கள். பாகிஸ்தானுடனான ஜம்மு காஷ்மீரின் பிணைப்பு ஒருபோதும் பலவீனமடையாமல் இருக்க இந்தக் கதையை உங்கள் அடுத்த தலைமுறைக்குச் சொல்ல மறக்காதீர்கள்.

பயங்கரவாதிகள் நாட்டின் தலைவிதியையே பறித்துவிட முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 1.3 மில்லியன் பலம் கொண்ட இந்திய இராணுவம், அதன் அனைத்து வசதிகளையும் கொண்டு, நம்மை மிரட்ட முடியாவிட்டால், இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானின் ஆயுதப் படைகளை அடக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? பலுசிஸ்தான், பாகிஸ்தானின் பெருமை. நீங்கள் அதை அவ்வளவு எளிதாக எடுத்துச் செல்வீர்களா? 10 தலைமுறைகளுக்குப் பிறகும் உங்களால் அதை எடுக்க முடியாது. இன்ஷா அல்லாஹ், இந்த பயங்கரவாதிகளை மிக விரைவில் தோற்கடிப்போம். பாகிஸ்தான் வீழ்ந்துவிடாது. நமது நிலைப்பாடு முற்றிலும் தெளிவாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் நமது கழுத்து நரம்பு. அதை நாங்கள் மறக்க மாட்டோம். எங்கள் காஷ்மீர் சகோதரர்களை அவர்களின் வீரப் போராட்டத்தில் விட்டுவிட மாட்டோம்” எனத் தெரிவித்திருந்தார்.

pakistan army chief

ஜம்மு - காஷ்மீர் இஸ்லாமாபாத்தின் கழுத்து நரம்பு என்று கூறிய பாகிஸ்தான் ராணுவத் தலைவரின் கருத்துகளை இந்தியா மறுத்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “வெளிநாட்டு விஷயங்கள் எப்படி கழுத்து நரம்புக்குள் இருக்க முடியும்? இது இந்தியாவின் யூனியன் பிரதேசம். பாகிஸ்தானுடனான அதன் ஒரே உறவு, அந்த நாடு சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களை விட்டு வெளியேறுவதுதான்" எனக் கண்டித்துள்ளார்.