எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்க ஆறு இடங்களில் புதிய strategic oil reserves-களை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நிலவி வரும் மேற்கு ஆசிய பதட்டங்களுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் இருப்பை 90 நாட்களாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. என்ன விவரம் என பார்க்கலாம்.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுவரும் மோதல்கள், குறிப்பாக சமீபத்திய இஸ்ரேல்-ஈரான் மோதலால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் என அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. Hormuz நீரிணை மூடப்படும் என ஈரான் கூறியதை அடுத்து ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் பிரச்சனையை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனை அடுத்து எரிசக்தி பாதுகாப்பிற்கான புதிய முயற்சியாக, உலகளாவிய எண்ணெய் விநியோக பிரச்னைகளைச் சமாளிக்க ஆறு புதிய இடங்களில் strategic petroleum reserves (SPRs) அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் நாட்டின் கச்சா எண்ணெய் இருப்பு திறனை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு அதற்கான அறிக்கைகளைத் தயாரிக்க, பொதுத்துறை பொறியியல் ஆலோசனை நிறுவனமான இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் (EIL) நிறுவனத்திடம் அரசாங்கம் கேட்டுள்ளது.
அந்த வகையில், முன்மொழியப்பட்ட தளங்களில் ஒன்றாக கர்நாடகாவின் மங்களூர் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும், மற்றொன்று ராஜஸ்தானின் பிகானரிலும் உள்ளதாக தெரிகிறது. அங்கு underground storage-க்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன. மீதமுள்ள நான்கு தளங்கள் கடற்கரைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அருகில் அமைந்துள்ளன. மேலும் இது குறித்தான அறிக்கைகள் ஆண்டு இறுதிக்குள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து இந்த திட்டம் ஏன் முக்கியமானது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது இந்தியா தனது கச்சா எண்ணெயில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதி செய்து, ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 5.5 மில்லியன் பீப்பாய்களைப் பயன்படுத்துகிறது. உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 20 சதவீதத்தையும், இந்தியாவிற்கான கச்சா எண்ணெயின் பெரும் பகுதியைக் கையாளும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவது போன்ற எந்தவொரு இடையூறும் எரிசக்தி விநியோகத்தையும் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும்.
விசாகப்பட்டினம் (1.33 மில்லியன் டன்), மங்களூர் (1.5 மில்லியன் டன்) மற்றும் படூர் (2.5 மில்லியன் டன்) ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்தியாவின் தற்போதைய எண்ணெய் இருப்புகளில் மொத்தம் 5.33 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை வைத்திருக்கின்றன. இது நாட்டின் தேவைகளில் சுமார் 9.5 நாட்களை மட்டுமே ஈடுகட்டுகிறது. அரசு நடத்தும் சுத்திகரிப்பு நிலையங்களால் பராமரிக்கப்படும் எண்ணெய் உட்பட, மொத்த மூலோபாய இருப்புக்கள் தற்போது சுமார் 77 நாட்கள் நிகர இறக்குமதியை ஈடுகட்டுகின்றன. எனவே புதிதாக 6 இடங்களில் strategic oil reserves-ஐ உருவாக்குவது இந்தியாவிற்கு பயனுள்ளதாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.