இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையை வெளிநாடுகளில் இருந்து பெறும் நிலையில், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியில் முன்னணி நாடாக திகழ்கிறது. 2026-27 நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி 47.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளுக்கு 56.1% அதிகரிப்பு கண்டுள்ளது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்தே பெறுகிறது. ஆனால் எண்ணெய்யை சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதில் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த ஓராண்டில் இந்தியாவின் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
நடப்பு 2026-27 நிதியாண்டில் முதல் 5 மாதங்களில் 47.9 பில்லியன் டாலர் மதிப்புக்கு வட அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.. இது முந்தைய நிதியாண்டின் முதல் 5 மாதங்களைவிட 7.9% அதிகம். ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ஏற்றுமதி 4.2% அதிகரித்து 31.9 பில்லியன் டாலராக இருந்தது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு 26.2 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. இது முன்பைவிட 47.2% அதிகம். மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி 56.1% அதிகரித்து 23.1 பில்லியன் டாலராக இருக்கிறது.
வேறு எந்த பகுதியையும் விட தென்கிழக்காசிய நாடுகளுக்குத்தான் இந்தியாவின் ஏற்றுமதி வெகுவாக அதிகரித்துள்ளது. ஜப்பான், தென்கொரியா போன்ற வடகிழக்கு ஆசிய நாடுகளுக்கு 21 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. இது 36.4% அதிகரிப்பாகும். இலங்கை, வங்கதேசம், நேபாளம், மாலத்தீவு போன்ற தெற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி 23.4% அதிகரித்து 12.8 பில்லியன் டாலராக இருக்கிறது. தென்அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி 8.1% உயர்ந்து 14.1 பில்லியன் டாலராக இருந்தது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இவற்றை ஒட்டியுள்ள தீவு நாடுகளுக்கு ஏற்றுமதி 11.1% அதிகரித்து 4 பில்லியன் டாலராக இருக்கிறது.