கார்கில் போருக்கு பிறகு இந்தியாவின் கடற்படையை பலப்படுத்த வேண்டும் என்று, அப்போதைய பாதுகாப்புத்துறை தீவிரம் காட்டியது. இதன் விளைவாக, கடந்த 1999-ஆம் ஆண்டுகளில், புராஜெக்ட் 75 என்ற அதிநவீன நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கான வழிமுறைகள் கடினமாக இருந்தது, ஒப்புதல் பெறுவதில் ஏற்பட்ட காலதாமதம், நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஏர்-இன்டிபென்டன்ட் புரபெல்ஷன் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களின் மீதான கடுமையான தேவைகள், அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு குறித்த தயக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களால், இந்த திட்டம் பல ஆண்டுகளாக முடங்கி இருந்ததாக கூறப்பட்டது.
இருப்பினும், 2007, 2010, 2019 ஆகிய கால கட்டங்களில், இந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவை அனைத்தும் பல்வேறு நடைமுறை சிக்கல்களால் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், இந்த திட்டம், ஜெர்மனியைச் சேர்ந்த திய்சென்குரூப் மரைன் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பல்கள் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன.
வழக்கமான டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல்கள் பேட்டரியை ரீசார்ஜ் செய்ய ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கு ஒருமுறை நீர்ப்பரப்பிற்கு வர வேண்டும். ஆனால், இதில் உள்ள ஏர்-இன்டிபென்டன்ட் பிரபல்ஷன் தொழில்நுட்பம் காரணமாக, நீர்ப்பரப்பிற்கு வராமல் தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு மேல் நீருக்கடியில் ரகசியமாகப் பயணிக்க முடியும்.
அடுத்ததாக, மிக குறைந்த சத்தத்துடன் இந்த கப்பல்கள் இயங்குவதால், எதிரிகளின் சோனார் கருவிகளால் இவை பயணிப்பதை கண்டுபிடிக்க முடியாது. இதுமட்டுமின்றி, கடல் ஆழத்தில் உள்ள அழுத்தங்களை சமாளிக்க பிரஷர் ஹல் என்ற மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், சுமார் கடலில் 400 மீட்டர் ஆழம் வரை சிறப்பாக செயலாற்ற முடியும். இறுதியாக, 533 மில்லி மீட்டர் அளவிலான டார்பிடோ குழாய்கள் இருப்பதால், சக்திவாய்ந்த ஏவுகணைகளை இலக்குகள் மீது ஏவ முடியும்.
உணவு, நன்னீர் மற்றும் எரிபொருள் வசதிகளுடன் எந்தவித வெளிப்புற உதவியும் இன்றி தொடர்ச்சியாக 84 நாட்கள் வரை நீண்ட கடற்பயணங்களை மேற்கொள்ளும் திறன் படைத்திருப்பதால், இந்த கப்பல்களை, இந்திய கடற்படையின் அசுரன் என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை.. இனி இந்திய கடற்படை எல்லையில் யாரும் நெருங்கவே முடியாத சூழலும் உருவாகியுள்ளது.