கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.35 கோடியாக உயர்ந்து, உலகளவில் 2ஆம் இடத்திற்கு சென்றது இந்தியா.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 68ஆயிரத்து 912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் 75 ஆயிரத்து 86 பேர் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்ட 904 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவைப் பொருத்தவரை இதுவரையில் 1 கோடியே 35 லட்சத்து 27ஆயிரத்து 717 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், நலம் பெற்றோர் எண்ணிக்கை 1 கோடியே 21 லட்சத்து 56ஆயிரத்து 529 ஆக உள்ளது. 12 லட்சத்து ஆயிரத்து 9 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஒரு லட்சத்து 70ஆயிரத்து 179 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 10 கோடியே 45 லட்சத்து 28ஆயிரத்து 565 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது.