இந்தியா

பிரான்சிடம் இருந்து மேலும் 36 ரஃபேல் போர் விமானங்கள் - மத்திய அரசு திட்டம்

rajakannan

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து மேலும் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சு நாட்டிலிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தில் பாஜக அரசு ஊழல் செய்ததாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுதொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என தீர்ப்பளித்தது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீது விசாரணை நிலுவையில் உள்ளது.

இத்தகைய சூழலில், மேலும் 36 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேற்கொண்டு 36 விமானங்கள் வாங்கப்படும் நிலையில் ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 72 ஆக உயரும்.

முதல் ரஃபேல் போர் விமானம் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து சமீபத்தில்தான் இந்தியாவிடம் கொடுக்கப்பட்டது. அதிகாரப்பூர்வமாக விமானங்கள் அனைத்தும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த மாதம் 8 ஆம் தேதி பிரான்ஸ் செல்லும் பொது ஒப்படைக்கப்படவுள்ளன. பாலக்கோட் தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படை தன்னுடைய பலத்தை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.