இந்தியா, ஜப்பானுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சரக்குப் பெட்டக முனையத்தை மேம்படுத்தும் திட்டத்துக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கன்டெய்னர் முனையம் அமைக்க இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இலங்கை அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் துறைமுக ஊழியர் சங்கங்களின் போராட்டம் காரணமாக, இந்திய, ஜப்பான் நிறுவனங்கள் இத்திட்டப் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டன. இந்நிலையில் தற்போது மேற்கு பகுதியில் சரக்கு பெட்டக முனையம் அமைக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கிழக்கு பகுதியில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டபோது, இலங்கை துறைமுக ஆணையம் 51 சதவீத பங்குகளை வைத்திருக்கும் என்றும், எஞ்சிய 49 சதவீத முதலீட்டை இந்தியா மற்றும் ஜப்பான் நிறுவனங்கள் முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள மேற்கு துறைமுக சரக்குப் பெட்டக முனையம் பகுதிக்கு இரு நாடுகளுக்கும் 85 சதவீத பங்குகள் வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளர் கேஹிலியா ராம்புக்வெல்லா உறுதி செய்துள்ளார்.
இதையடுத்து, சரக்குப் பெட்டக முனையம் அமைக்க இந்தியா தரப்பில் அதானி நிறுவனம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தரப்பில் நிறுவனத்தின் பெயர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. கொழும்பு சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தில் சீனா நிறுவனம் 85 சதவீதம் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது. அதைப்போல தற்போது இந்திய, ஜப்பான் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.