உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா என்று சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. 500 பேரே கலந்து கொண்டு கூறிய கருத்துகள் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது என இந்தியா அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் இப்போது வரை குழந்தைகள், சிறுமிகள், இளம்பெண்கள், வயதானவர்கள் என பலர் மீதும் பாலியல் வன்கொடுமை தாக்குதல் தொடர்ந்து வருகிறது. சென்னையில் 12 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
உலகம் முழுக்க இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு என்ற எண்ணம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இளையோருக்கான உலக ஸ்குவாஷ் போட்டி நடைபெற உள்ளது. அதில் சுவிஸ் நாட்டின் முதல்நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் அம்ப்ரே அலின்க்ஸ் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் சென்னை வந்த அந்நாட்டு அணியில் அவர் மட்டும் வரவில்லை. ஏன் அவர் வரவில்லை என விசாரித்த போது, இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என அறிக்கை வந்துள்ளதால், அம்ப்ரேயின் பெற்றோர் அவரை இந்தியா வர அனுமதி அளிக்கவில்லை என அவரது பயிற்சியாளர் தெரிவித்தார்.
அம்ப்ரே விவகாரம் குறித்து விளையாட்டு ஏற்பாட்டாளர்களிடம் கேட்ட போது “பெற்றோர்களின் அனுமதி என்பது முக்கியம், அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். அதே நேரத்தில் இந்தியாவின் அம்ப்ரே விளையாடி இருந்தால் , கண்டிப்பாக நன்றாக இருந்திருக்கும்” என்றனர். அதே நேரத்தில் விளையாட்டில் பங்குபெறும் இன்னும் சில வீராங்கனைகளும் இதே போன்று பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியதாகவும் தெரிகிறது.
சுவிஸ் வீராங்கனையின் பெற்றோர் இப்படி மறுத்திருப்பது குறித்து பேசிய தமிழ்நாடு ஸ்குவாஷ் அமைப்பு “ தேவையில்லாமல் இது போன்ற அறிக்கைகளை பெரிதுபடுத்துகிறார்கள் என்றும் அத்தகைய அச்சம் தேவையில்லாத ஒன்று என்றும் தெரிவித்தனர். மேலும் ஏதோ ஒரு அறிக்கையை வைத்துக் கொண்டு இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற முடிவுக்கு வருவது அநாவசியம்” எனவும் தெரிவித்தனர்.