இந்தியா

“அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பின் இந்தியா தான்” - எல்லை பிரச்னை குறித்து அமித்ஷா

“அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பின் இந்தியா தான்” - எல்லை பிரச்னை குறித்து அமித்ஷா

webteam

அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பின்னர் எல்லையைப் பாதுகாப்பதில் இந்தியாவே சிறந்து விளங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பீகாரில் நடைபெற்ற காணொலிக் காட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, கொரோனாவுக்கு எதிராகப் போராடும் முன்கள பணியாளர்களுக்குத் தலைவணங்குவதாகத் தெரிவித்தார். சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்பு அளப்பரியது எனக் கூறினார். பிரதமர் மோடி கூறியதுபோல அனைவரும் கொரோனாவிற்கு எதிராக ஒன்றுகூடியதை நினைத்துப் பெருமையடைவதாகத் தெரிவித்தார்.

இந்தக் காணொலிக்கூட்டம் தேர்தலுக்கானதோ அல்லது அரசியலுக்கானதோ அல்ல என்றும், இது நாட்டு மக்களை கொரோனா போராட்டத்திற்கு எதிராக ஒன்றுகூடவே என்றார். ஒருகாலத்தில் இந்திய எல்லைக்குள் யார் வேண்டுமானாலும் நுழைய முடிந்ததாகவும், டெல்லி அரசைப் பாதுகாப்பதற்காக நமது ராணுவ வீரர்களின் தலை துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் உரி மற்றும் புல்வாமா தாக்குதலை இந்தியா நடத்தியதாகக் கூறினார். தாங்கள் சர்ஜிகல் ஸ்டிரைக் மற்றும் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டார்.

மேலும், இந்திய ராணுவம் உலக அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பின்னர் இந்திய எல்லை தான் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.