சீன, தென்கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கண்காணிப்பு கேமராக்களின் HARDWARE, SOFTWARE, SOURCE CODE ஆகிய அம்சங்களை அரசின் ஆய்வகங்களில் பரிசோதனை செய்த பின்பே சந்தைக்கு அனுப்ப வேண்டும் என்ற விதியை கடந்த மாதம் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இணையதளத்துடன் இணைத்து கண்காணிக்க கூடிய அனைத்துவகை கேமராக்களுக்கும் இது பொருந்தும். இது குறித்து கடந்த மாதமே ஹன்வா, மோட்டரோலா, ஷாவ் மி, ஹனிவெல், பாஷ் போன்ற கேமரா நிறுவனங்களிடம் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இணையதள இணைப்பு வசதி கொண்ட கேமராக்களில் தொழில்நுட்ப வசதியை சேர்ப்பதன் மூலம் பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பான முக்கிய தரவுகள் வெளிநாடுகளுக்கு எளிதில் தெரியும் நிலை உள்ளது. இதை எதிரி நாடுகள் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து நம் அரசின் நகர்வுகளை உளவு பார்க்கும் வாய்ப்பு நிச்சயம் இருப்பதாக சைபர் தொழில்நுட்ப நிபணர் குல்ஷன் ராய் என்பவரும் எச்சரித்திருந்தார். இந்த சூழலில் இந்திய பாதுகாப்புத்துறை நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு சீனா போன்ற நாடுகளில் இருந்து கேமராக்கள் வாங்கி பொருத்துவது பாதுகாப்பு அபாயம் நிறைந்ததாக கருதப்படுகிறது. இந்தியாவில் 10 லட்சம் அரசு அலுவலகங்களில் சீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஒருவரே நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.
இந்த சூழலில்தான் இறக்குமதி கேமராக்களை பரிசோதனைகளுக்கு பின்பே விற்கும் விதியை அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த புதிய விதியால் கேமராக்களை சோதித்து சான்று அளிப்பதற்கு நீண்ட தாமதம் ஏற்படுவதாகவும் இதனால் சிசிடிவி கேமராக்கள் தட்டுப்பாடு அதிகரிக்கும் என்றும் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். எனினும் கேமரா நிறுவனங்களின் இந்த முறையீட்டை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. சிசிடிவி கேமராக்கள் தனி நபர் உரிமைகளை பாதிப்பதாக விமர்சனங்கள் உள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்து ஏற்படுத்த வாய்ப்புளளது என்ற தகவல் அதிர வைப்பதாக உள்ளது.