இந்தியா கனடா
இந்தியா கனடா pt web
இந்தியா

கனடா நாட்டினருக்கு விசா இல்லை - இந்தியாவின் அதிரடி முடிவால் இருநாட்டு உறவில் வெடிக்கும் விரிசல்!

PT WEB

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் பேசிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ, இந்திய அரசின் முகவர்களுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். இதற்கு இந்திய தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்தியா கனடா

இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் கனடா தூதரை வெளியேறும்படி கூறியது. இதனிடையே காலிஸ்தான் ஆதரவு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவை குற்றம்சாட்டுவது தனது எண்ணம் இல்லை என்றும், அந்த விவகாரத்தை இந்தியா சரியாக கையாள வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ விளக்கம் அளித்தார்.

காலிஸ்தான் தீவிரவாதிகள் மற்றம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதன் மூலம் இந்தியாவின் இறையாண்மைக்கும், பிராந்திய ஒருங்கிணைப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கனட அரசுக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்தது. மேலும், கனடா அரசின் செயலற்ற தன்மை, தொடர்ந்து கவலைத்தரத்தக்கதாக இருப்பதாக வெளியுறவுத்துறை கூறியது.

ஜஸ்டின் ட்ரூடோ, மோடி

இந்நிலையில் இன்று, சர்வதேச அமைப்பில் தேடப்படுபவராகவும் காலிஸ்தான் ஆதரவாளராகவும் தீவிரவாதியாகவும் கண்டறியப்படக்கூடிய சுக்தூல் சிங் கனடா நாட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்வதற்கான விசாக்கள் வழங்குவதை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கனடா அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை அமைகிறது. ஆனால், அதே சமயத்தில் இந்திய வம்சாவளியினர் கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர். அவர்கள் இந்தியாவிற்கு வரவேண்டுமென்றால் விசா வாங்க வேண்டும். அத்தகையோர் விசா வாங்க வேண்டிய சூழலில் அவர்களுக்கும் இந்த சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலதிக விவரங்கள் இன்று மாலை தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடா விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடத்த இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.