கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தெரஃபி சிகிச்சை அளிக்க இந்திய அரசு தயாராகி வருகிறது. 100 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்மா தெரஃபி சிகிச்சை, கொரோனாவுக்கு நல்ல பலனை தரும் எனவும் நம்பப்படுகிறது.
நமது உடலில் வைரஸோ அல்லது பாக்டீரியாவோ புகுந்துவிட்டால், ரத்த பிளாஸ்மாவில் அதிக அளவு பிறபொருளெதிரி உருவாகி நோய் எதிர்ப்பு மண்டலத்தை எச்சரிக்கும். அப்போது உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்கள் அந்த வைரஸ் அல்லது பாக்டீரியாவை அழிக்கும். இப்படித்தான் நோய் தொற்றிலிருந்து நோய் எதிர்ப்பு மண்டலம் உடலை காக்கிறது. மஞ்சள் காமாலை, தட்டம்மை, மலேரியா, டைஃபாய்டு என ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனியான பிறபொருளெதிரி நமது உடலில் உருவாகிறது. அப்படி உருவாகும் பிறபொருளெதிரி நமது ரத்தத்தில் வாழ்நாள் முழுவதும் கலந்திருக்கும். மீண்டும் அதே நோய் நமது உடலை தாக்கினால், இந்த பிறபொருளெதிரி எளிதில் அந்த நோயை விரட்டியடிக்கும்.
தற்போது பரவும் கொரோனா வைரஸ் நமது உடலுக்குள் செல்வது புதிது என்பதால், அதனை அழிக்கும் பிறபொருளெதிரியை உருவாக்க நமது நோய் எதிர்ப்பு மண்டலம் கடினப்படலாம். கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு அவர்களது ரத்தத்தில் அந்த வைரஸை கட்டுப்படுத்தும் பிறபொருளெதிரி அதிகம் இருக்கும். எனவே, அவர்களின் ரத்த பிளாஸ்மாவிலிருந்து பிறபொருளெதிரியை பிரித்தெடுத்து, மோசமான நிலையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு செலுத்துவதே பிளாஸ்மா தெரஃபி சிகிச்சை எனப்படுகிறது.
இந்த சிகிச்சை முறை புதிதல்ல. 1890 ஆம் ஆண்டு கண்டுபிடித்த பிளாஸ்மா தெரஃபி சிகிச்சைக்காக, 1901ஆம் ஆண்டு ஜெர்மனி ஆராய்ச்சியாளர் BHERING-கால் மருத்துவத்திற்கான முதல் நோபல் பரிசை பெற்றார். அதன்பிறகு 1918ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளு என்ற தொற்று நோய் பரவியபோது, பிளாஸ்மா தெரஃபி சிகிச்சை அளிக்கப்பட்டது. சார்ஸ், எபோலா போன்ற நோய் பரவலின் போதும் பிளாஸ்மா தெரஃபி சிகிச்சை மூலம் பலர் காப்பாற்றப்பட்டனர்.
எனவே கொரோனாவிலிருந்து காக்கவும் இதே சிகிச்சை முறையை சீனா கையில் எடுத்தது. பிளாஸ்மா சிகிச்சை அளித்த 3 நாட்களில் வென்டிலேட்டரில் இருந்த நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக சீன மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சீனாவைத் தொடர்ந்து இந்த சிகிச்சை முறையை தென்கொரியா, துருக்கி, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கையில் எடுத்துள்ளன. இந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. ஏற்கெனவே கேரளா இந்த சிகிச்சையை சோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் அனுமதி பெற்ற நிலையில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களும் பிளாஸ்மா சோதனை மேற்கொள்ள அனுமதி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.