இந்தியா

இந்தியாவில் நுழைந்தது குரங்கு அம்மை - கேரளாவில் ஒருவருக்கு உறுதி

JustinDurai

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே அதிகமாக பரவி வந்த இந்தக் காய்ச்சல் சமீப காலமாக பல்வேறு நாடுகளிலும் பரவத் தொடங்கியது. இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உட்பட 57 நாடுகளில் 6,000க்கும் மேற்பட்டோருக்கு தற்போது இந்த நோய் பரவியுள்ளது. இதையடுத்து காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரி, பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவருடன் தொடர்புடைய 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

கடந்த 1958ம் ஆண்டு குரங்குகளில் முதன்முதலில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ’குரங்கு அம்மை’ என்ற பெயர் சூட்டப்பட்டது. முதன்முதலில் குரங்குகளில் கண்டுபிடிக்கப்பட்டாலும் தற்போது இந்த வைரஸ், மனிதனிடம் இருந்தே மனிதனுக்குப் பரவுகிறது.

இதையும் படிக்கலாமே: சிவப்பா? வெள்ளையா? - எந்த வெங்காயம் ஆரோக்கியமானது? ஏன்?