புவி வெப்பமயமாதல் வருங்கால சந்ததியினரை பெரிதும் பாதிக்கும் என்பதால் அதனை தடுக்க தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் இந்தியா நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அறிவியல் தொழில்நுட்ப மற்றும் வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், பல்வேறு ஆராய்ச்சி மேற்கொண்டு 175 ஜிகா வாட் மின்சாரத்தை சூரிய மின்சக்தி மூலம் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்திய அறிவியல் கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன். உலக வெப்பமயமாதல் குறைப்பதில் இந்தியா முக்கிய இடம் வகித்து வருகிறது. பாரிஸ் மாநாட்டில் இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்து வைத்துள்ளது.
சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் சாத்தியமுள்ள நடவடிக்கைகள் அரசு எடுத்து வருகிறது. அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வருகிறது. எதிர்காலத்தை பாதிக்கும் பிரச்னை என்பதால் இதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. மேலும், பருவ நிலை மாற்றங்களால் ஏற்படும் பிரச்னைகள் என்ன என்பது குறித்து பிரதமர் தெளிவாக இருக்கிறார். பருவநிலை மாற்றம் தொழில்நுட்ப பிரச்சினை அல்ல. இது தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய ஒரு ஒழுங்குமுறை. இது வருங்கால சந்ததியினரை பாதிக்கும். ஆதலால் இன்னும் பிறந்தேயிராத குழந்தைகளின் உரிமைகளை காக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை ஆகும். இந்த விவகாரத்தில் நம் நாடு மட்டுமல்லாது உலக அளவிலும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.