India Dives Deeper: MATSYA-6000 Completes Successful Unmanned Trial X
இந்தியா

ஆழ்கடலில் இந்தியாவின் பாய்ச்சல்.. 6000 மீட்டர் ஆழத்தை நோக்கி MATSYA-6000!

மனிதர்களை ஆழ்கடலுக்கு அனுப்பும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

PT WEB

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதும், நிலவில் நீர் இருப்பதைக் கண்டறிவதும் எவ்வளவு சவாலானதோ, அதற்கு இணையாகவே ஆழ்கடலை ஆராய்வதும் சவாலானது. மத்திய அரசின் சமுத்ரயான் திட்டத்தின் முக்கியப் பகுதியாகக் கருதப்படும் MATSYA-6000 நீர்மூழ்கி வாகனம், தனது ஆளில்லாச் சோதனையை நவம்பர் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, தமிழ்நாட்டின் காட்டுப்பள்ளியில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் இந்த ஆளில்லாச் சோதனையைப் பார்வையிட்டதாக, அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (MoES NIOT) தனது X பதிவில் தெரிவித்துள்ளது. வாகனத்தின் மிதப்புத் திறன், நீருக்குள் மூழ்கிய நிலையிலான நிலைத்தன்மை, பேலஸ்ட் அமைப்புகள், அனைத்து உபகூறுகள் ஆகியவை சோதிக்கப்பட்டதாகவும், சோதனை நெறிமுறைப்படி இவை வெற்றிகரமாக நிறைவடைந்ததால், MATSYA அடுத்த கட்டச் சோதனைக்குச் செல்லவிருப்பதாகவும் அந்தப் பதிவு தெரிவிக்கிறது.

மனிதர்களை ஆழ்கடலுக்கு அனுப்பும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த முயற்சியின் மையமாக உள்ள MATSYA-6000, இந்தியாவின் முதல் மனிதர்கள் செல்லும் ஆழ்கடல் நீர்மூழ்கி வாகனம். சென்னையில் உள்ள NIOT இதை உருவாக்கியுள்ளது.

2.1 மீட்டர் விட்டம் கொண்ட சிறிய கோள வடிவ உடலுக்குள் மூன்று பேரை 6,000 மீட்டர் ஆழத்துக்கு இது கொண்டு செல்லும். கடல் தரையை ஆராயவும், கடல் பல்லுயிர்த்தன்மையைப் பற்றி ஆய்வு செய்யவும், ஆழ்கடல் வளங்களை அணுகும் தொழில்நுட்பங்களை உருவாக்கவும் MATSYA-6000 இலக்கு கொண்டுள்ளது.

6,000 மீட்டர் ஆழத்தில், 'அபிசல்' (abyssal) மண்டலம் எனப்படும் ஆழ்கடல் பகுதிக்குள் இந்த வாகனம் நுழையும். அங்கு கடல் மட்டத்தில் உள்ள அழுத்தத்தைவிட ஏறத்தாழ 600 மடங்கு அதிக அழுத்தம் இருக்கும். சூரிய ஒளியால்கூட அங்கு ஊடுருவ முடியாது. இந்த ஆழத்துக்கு மனிதர்களும் நீர்மூழ்கி வாகனங்களும் செல்வது அவ்வளவு எளிதல்ல. இங்குள்ள அழுத்தம், வாகனத்தின் மேற்பரப்பில் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டரிலும் பல நூறு கிலோகிராம் எடையை அழுத்துவதற்கு நிகரானது.

India Dives Deeper: MATSYA-6000 Completes Successful Unmanned Trial

இருப்பினும், இங்கும் சூரிய ஒளியின்றி வாழும் உயிரினங்களையும், நீர்வெப்பத் துவாரங்களைச் (hydrothermal vents) சுற்றி வாழும் நுண்ணுயிரிகளையும் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆழ்கடலின் சில பகுதிகளில், கடல் தரையில் சிதறிக் கிடக்கும் உருளைக்கிழங்கு வடிவக் கனிமப் படிவுகளான பாலிமெட்டாலிக் முடிச்சுகளும் (polymetallic nodules) உள்ளன.

இந்தப் பயணம், மனிதர்களை நீருக்கடியில் அனுப்பி ஆழச் சாதனை படைப்பது மட்டுமல்ல; இதன் பின்னால் பெரிய பொருளாதார, அறிவியல் நோக்கங்களும் உள்ளன. கனிமங்களைத் தாண்டி, அறிவியல் அறிவுக்காகவும் பல நாடுகள் கடல் தரையை ஆராய்கின்றன. இத்தகைய ஆழ்கடல் பயணங்கள், நீருக்கடியிலான புவியியல் அமைப்புகள், கடல் நீரோட்டங்கள், கடல் சூழல் அமைப்புகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

MATSYA-6000, மூன்று அக்வாநாட்களை (aquanauts) சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்பரப்பு மற்றும் நீருக்கடியிலான தகவல் தொடர்புக்காக அக்கௌஸ்டிக் மோடம், நீருக்கடியிலான தொலைபேசி, VHF ரேடியோ கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. அழுத்தம் தாங்கும் கோளத்தின் உள்ளே, மனிதர்களுக்கான சிறப்பு உயிர்காப்பு அமைப்புகள், முக்கியமான சூழல் கண்காணிப்புத் திரைகள், வழிசெலுத்தும் ஜாய்ஸ்டிக்குகள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் அதிக ஒளிச்செறிவு கொண்ட நீருக்கடியிலான விளக்குகள், கேமராக்கள், பல கடலியல் உணரிகள் (sensors) உள்ளன.

புவி அமைப்பு அறிவியல் கவுன்சிலின் (Earth System Sciences Council) இரண்டாவது பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியதாகவும், அதில் ஆழ்கடல் இயக்கத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ததாகவும் மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங் தனது X பதிவில் தெரிவித்துள்ளார். இந்தோ-பிரெஞ்சு ஆய்வுப் பயணத்தின்போது, பிரான்ஸின் நாட்டிலே (Nautile) நீர்மூழ்கி வாகனத்தில் இந்திய அக்வாநாட்கள் 4,025 மீட்டர் மற்றும் 5,002 மீட்டர் ஆழம் வரை வெற்றிகரமாகப் பயணித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். MATSYA-6000 என்பது 6,000 மீட்டர் ஆழத்துக்கு வடிவமைக்கப்பட்ட, மனிதர்கள் செல்லும் நீர்மூழ்கி வாகனம் என்றும் அவரது பதிவு குறிப்பிடுகிறது.

மனிதர்களை ஆழ்கடலுக்கு அனுப்பி ஆராயும் நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், ஜப்பான் ஆகியவற்றின் பட்டியலில் இணையும் இலக்குடன் இந்தியா செயல்பட்டு வருகிறது.