இந்தியா

“பிரச்னைகளுக்கு தீர்வு இல்லை”- தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் சேர இந்தியா மறுப்பு 

webteam

சீனா உள்ளிட்ட நாடுகளுடனான தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் சேருவதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. 

ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்ற பிரதமர் மோடி, ஆசியான் மற்றும் சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 15 நாடுகளை இணைக்கும் தடையற்ற வர்த்தக உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார். அப்போது இந்தியாவின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாததால், இந்த உடன்பாட்டில் இணைய முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது. 

தற்போது இருக்கும் உடன்பாட்டை அப்படியே ஏற்றுக் கொண்டால், இந்தியர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். தடையற்ற வர்த்தக உடன்பாட்டில், அடிப்படை கொள்கைகள் முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்றும், இது தொடர்பாக இந்தியா தெரிவித்த கவலைகளுக்கு தீர்வு எட்டப்படாதது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் கூறினார். 

எனவே, இத்தகைய சூழலில் தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் இந்தியா இணைவது என்பது சாத்தியமற்றது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்திய விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில்துறையினர் ஆகியோரது நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தக போரால் ஏற்பட்ட பாதிப்பை சரிக்கட்டும் வகையில், ஆசியான் நாடுகளுடன் தடையற்ற வர்த்தக உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கு சீனா அதிக அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த உடன்பாடு முழுமையாக சீனாவின் நலன் சார்ந்து அமைந்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இதனாலேயே இந்த ஒப்பந்தத்தில் இணைய இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.