வங்கதேசத்தில் இடைக்கால அரசின் கீழ் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. மைமென்சிங் மாவட்டத்தில் இந்து இளைஞர் கொலை செய்யப்பட்டதை இந்தியா கண்டித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இதனையடுத்து ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். பின் அந்நாட்டு சிறுபான்மை மக்களான இந்துக்கள் மீதான தாக்குதல், அவர்களின் வீடுகளுக்கு தீ வைப்பு என அடுத்தடுத்து பல அதிர்ச்சி சம்பவங்களை போராட்டக்காரர்கள் அரங்கேற்றினர்.
இப்படி தொடர்ந்து அந்நாட்டில் வன்முறைகள், போராட்டங்கள் என அந்நாடே அந்நாட்டு மக்களால் கலவர பூமியான நிலையில், வங்கதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்தில் கடந்த டிசம்ப்டர் 18ஆம் தேதி 27 வயதான தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெஸ்வால் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தப்போது, வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறை குறித்த கேள்விக்கு பதில் அளித்தார், அப்போது "வங்கதேசத்தில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்க வேண்டியது இடைக்கால அரசாங்கத்தின் பொறுப்பு. அங்குள்ள நிலவரங்களை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக தொடரும் பகைமை குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. வங்கதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்தில் இந்து இளைஞர் ஒருவர் சமீபத்தில் கொல்லப்பட்டதை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இடைக்கால அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக 2,900-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களை வெறும் ஊடக மிகைப்படுத்தல்கள் என்றோ அல்லது அரசியல் வன்முறை என்றோ புறந்தள்ளிவிட முடியாது" என தெரிவித்தார்.
மேலும், 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாரிக் ரஹ்மான் நாடு திரும்பியிருக்கும் நிலையில், டாக்கா விமான நிலையத்தில் லட்சக்கணக்கான பிஎன்பி தொண்டர்கள் திரண்டு வந்து, தாரிக் ரஹ்மானை வரவேற்றனர். அவரது மனைவி ஜூபைதா, மகள் ஜைமா ஆகியோரும் உடன் வந்தனர். குண்டு துளைக்காத பேருந்தில் தாரிக் ரஹ்மானும் குடும்பத்தினரும் டாக்காவில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரந்திர் ஜெய்ஸ்வால், "வங்கதேசத்தில் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை இந்தியா ஆதரிக்கிறது. இந்த நிகழ்வை, அந்தப் பின்னணியில் பார்க்க வேண்டும்" என கூறினார்.
பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தலில் ஹசீனாவின் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், பிஎன்பி வெற்றிபெற்று கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.