இந்தியா

இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் இந்தியா- பூடான் நுழைவு வாயில்கள் திறப்பு

JustinDurai

கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த இந்தியா - பூடான் எல்லை நுழைவு வாயில் செப்டம்பர் 23ஆம் தேதி திறக்கப்படுகிறது.

அசாம் மாநிலத்தை ஒட்டிய பூடான் எல்லையில் சம்ரப் ஜோங்கர் மற்றும் கெலேபு பகுதிகளில் இந்தியா - பூடான் எல்லை நுழைவு வாயில்கள் அமைந்துள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக  இந்த நுழைவு வாயில்கள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா வீரியம் குறைந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிவரும் நிலையில், இந்த நுழைவு வாயில்களை தற்போது திறப்பதற்கு இருநாட்டு அரசும் முடிவு செய்துள்ளன. அதன்படி வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி சம்ரப் ஜோங்கர் மற்றும் கெலேபு நுழைவு வாயில் திறக்கப்பட இருக்கிறது.

முன்னதாக இந்த நுழைவு வாயில்களை திறப்பதற்காக இந்தியா - பூடான் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து வர்த்தகம், சுற்றுலா மற்றும் அரசு அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ பயணங்களுக்காக இந்தியா-பூடான் எல்லை நுழைவு வாயில்கள் இம்மாதம் 23ஆம் தேதி முதல் திறக்கப்படுவதாக பூடான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 3 புதிய வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சேவை மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி! லேசான காயத்துடன் உயிர்தப்பினார்!