drinks  Reuters
இந்தியா

மது நுகர்வில் புதிய போக்கு.. உலகிற்கு எதிர்திசையில் இந்தியா.. அமெரிக்கா, சீனாவை முந்தியது!

உலக நாடுகளில் மது நுகர்வு குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் 2026-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 10% அதிகரித்துள்ளதாக IWSR ஆய்வு தெரிவித்துள்ளது.

PT WEB

உலக நாடுகளில் மது அருந்துபவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் மது அருந்தும் அளவு வேகமாக அதிகரித்து வருகிறது.

2026-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 10 சதவீத வளர்ச்சியை எட்டி அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளை முந்தி இருக்கிறது இந்தியா.

ஆய்வு செய்யப்பட்ட 21 நாடுகளில் இந்தியாவில் மட்டும்தான் அனைத்து வகையான மதுபானங்களின் நுகர்வும் உயர்ந்துள்ளது.

குறிப்பாக, பீர் நுகர்வு 16 சதவீதமும், பிற மதுபானங்களின் நுகர்வு 12 சதவீதமும் அதிகரித்துள்ளது. விஸ்கி, வோட்கா, ஜின் உள்ளிட்ட மற்ற மதுபான வகைகளிலும் நுகர்வு உயர்ந்திருக்கிறது. ஒயின் வகைகளின் நுகர்வும் உயர்ந்துள்ளது.

drinks

ஆனால், உலகின் மிகப்பெரிய மதுபானச் சந்தைகளில் ஒன்றான அமெரிக்காவிலும், முக்கியச் சந்தையான சீனாவிலும் மது நுகர்வு சரிந்துள்ளது. அமெரிக்காவில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 4 சதவீதமும், சீனாவில் 3 சதவீதமும் மதுபான நுகர்வு குறைந்திருக்கிறது.. குறிப்பாக, பீர் நுகர்வில் அமெரிக்கா 4 சதவீத சரிவையும், சீனா 2 சதவீத சரிவையும் சந்தித்துள்ளன.

உலக அளவில் மது நுகர்வு 1 சதவீதம் சரிவை கண்டுள்ளது. மதுபான சந்தை (Alcoholic beverage market) பற்றிய தரவுகள் மற்றும் ஆய்வுகளை வழங்கும் IWSR மேற்கொண்ட ஆய்வில், உலகின் மொத்த மதுபான நுகர்வில் 76 சதவீதத்தைக் கொண்டுள்ள 21 நாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த 21 நாடுகளையும் சேர்த்துப் பார்த்தபோது மது நுகர்வு 1% நுகர்வு குறைந்துள்ளது.

அதேசமயம், அமெரிக்கா மற்றும் சீனாவை மட்டும் நீக்கிவிட்டுப் பார்த்தால், மீதமுள்ள 19 நாடுகளில் மது நுகர்வு 1 சதவீதம் அதிகரித்துள்ளது. கொலம்பியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து ஆகிய நாடுகள், மது நுகர்வில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக உள்ளன.

drinks

அமெரிக்காவில் விலைவாசி உயர்வு, வர்த்தக வரிகள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக மக்கள் மதுபானங்களுக்குச் செலவிடுவதைக் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. சீனாவைப் பொறுத்தவரை, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ளதுடன், சந்தையிலும் பல சிக்கல்கள் நிலவுகின்றன. இதனால் அங்கும் மதுபான நுகர்வு குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. உலக அளவில் உடல் எடையைக் குறைப்பது, உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது என மக்கள் தங்களது வாழ்க்கை முறையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், மது அருந்துவதைக் கட்டுப்படுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது. அதேவேளையில், சர்வதேச மதுபான நிறுவனங்கள் இந்தியாவை முக்கியமான வளர்ச்சிச் சந்தையாகப் பார்க்கின்றன.