பிரம்மபுத்திரா அணை எக்ஸ் தளம்
இந்தியா

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே பிரமாண்ட அணை.. சீனாவின் திட்டத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு!

பிரம்மபுத்திரா நதி மீது மிகப்பெரிய அணையைக் கட்டும் சீனாவின் திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Prakash J

இந்திய எல்லையையொட்டி தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே 11 லட்சம் கோடி ரூபாய் செலவில் உலகின் மிகப்பெரிய அணையை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரம் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், “பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்படவுள்ள அணையால் இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு பாதிப்பு ஏற்படாது” என சீனா அரசு விளக்கமளித்தது. எனினும், சீனாவின் இந்த முடிவு பிரம்மபுத்திரா நதியை நம்பியுள்ள இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு பெரும் பிரச்னையைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா

இந்த நிலையில், இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "இந்த திட்டம் குறித்து இந்தியா கவலையை தெரிவித்துக்கொள்கிறது. பிரம்மபுத்திரா நதியில் எங்களுக்கும் உரிமை இருக்கிறது என்பதன் அடிப்படையில் இதனை தெரிவித்திருக்கிறோம். எனவே இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை மிக அவசியம். இப்போதைக்கு நாங்கள் சீனாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். தேவையான நேரத்தில் உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுப்போம். எங்களுடைய வலியுறுத்தல்கள் எல்லாம், நதியை நம்பியிருக்கும் மாநிலங்களை வறட்சியில் தள்ளக்கூடாது என்பதுதான். இந்த அணை குறித்தும், அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்தும் இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிடம் சீனா கலந்துரையாட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

பிரம்மபுத்திரா நதி நீரை நம்பியிருக்கும் நாடுகள் நலனுக்கு முன்னுரிமை அளித்துச் செயல்பட வேண்டும் என ஏற்கெனவே சீன அரசிடம் இந்திய அரசு சார்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.