Rain PTI
இந்தியா

அடுத்த 6 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. புதிய அப்டேட்.. வட மாநிலங்களிலும் நீடிப்பு!

தமிழகத்தைப் பொறுத்தவரை நாளை முதல் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Prakash J

நாட்டின் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வாளர் நரேஷ் யாதவ் கூறுகையில், ‘அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தில் மிக கனமழை பெய்யும். நாளையும் சில இடங்களில் கனமழை தொடரும். உத்தரப் பிரதேசத்தில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

rain

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி-NCR-ஐப் பொறுத்தவரை, இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மழைப் பொழிவு இன்றுடன் குறையும் என்றாலும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்பிறகு, வானிலை தெளிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரிலும் வரும் நாட்களில் கனமழை நிலவும் என வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை நாளை முதல் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோரத் தமிழகம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 7.6 கிமீ உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் தெற்கு தெலங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக இந்த மழைப் பொழிவு ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய பிற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.