அப்துல்லா கலீல், ஜெய்சங்கர் எக்ஸ் தளம்
இந்தியா

இந்தியா - மாலத்தீவு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.. அதிபரை பதவிநீக்கம் செய்ய சதியா?

இந்தியா வழங்கும் நிதி உதவி வாயிலாக, மாலத்தீவில் மூன்றாம் கட்ட சமூக மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையெழுத்திட்டது.

Prakash J

அண்டை நாடான மாலத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா கலீல், மூன்று நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி வந்துள்ளார். அப்போது, இந்தியா வழங்கும் நிதி உதவி வாயிலாக, மாலத்தீவில் மூன்றாம் கட்ட சமூக மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையெழுத்திட்டது.

இந்தியா - மாலத்தீவு இடையிலான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான கூட்டுப் பார்வையை நனவாக்குவதில், இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உறுதியுடன் இருப்பதாக அப்துல்லா கலீல் தெரிவித்தார்.

அப்துல்லா கலீல், ஜெய்சங்கர்

பின்னர் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு உள்ளூர் கரன்சிகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு இருதரப்பும் கையொப்பமிட்டுள்ளது. பல்வேறு துறைகளிலும் எங்கள் உறவை வலுப்படுத்தி உள்ளோம். மாலத்தீவுக்கு எப்போதும் இந்தியா உறுதுணையாக இருக்கும். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற மத்திய அரசு கொள்கையின் உறுதியான வெளிப்பாடாக மாலத்தீவு திகழ்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை பதவி நீக்கம் செய்ய, 40 எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக, அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி இந்தியாவிடம் 50 கோடி ரூபாய் பணம் கேட்டதாக அமெரிக்கா நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால், இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரன்தீா் ஜெய்ஸ்வால், “அந்த நாளிதழ் மற்றும் நிருபரின் செயல்பாடுகள் மீது எந்த நம்பகத்தன்மையும் இல்லை என்பதே மத்திய அரசின் கருத்து” எனத் தெரிவித்துள்ளார்.

முகமது முய்சு, மோடி

சீன ஆதரவாளராகக் கருதப்படும் முகமது முய்சு மாலத்தீவு அதிபராக, கடந்த 2023-ஆம் ஆண்டு பதவியேற்றாா். இதைத்தொடா்ந்து மாலத்தீவில் அந்நாட்டுக்கு இந்தியா வழங்கிய இரண்டு ஹெலிகாப்டா்கள், கடல் ரோந்து விமானம் ஆகியவற்றை இயக்கி, பராமரித்து வந்த இந்திய ராணுவ வீரா்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசிடம் அதிபர் முய்சு வலியுறுத்தினாா். அதன்படி, அந்த வீரா்கள் திரும்பப் பெறப்பட்டனா். இதனால் இந்தியா-மாலத்தீவு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனினும் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியா வந்த முய்சுவால், இருநாட்டு உறவுகளும் மேம்பட்டன. தொடர்ந்து, ”இந்தியா-மாலத்தீவு இடையிலான உறவு வலுவாக்கப்படும்” என முய்சு உறுதியளித்தார்.