243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11-ஆம் தேதிகளில் இரண்டுகட்டமாக நடைபெற்றது.. ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என மும்முனைப் போட்டி நிலவியது..
யார் ஆட்சியை பிடிக்கப்போகிறார்கள் என்ற அதிகப்படியான எதிர்ப்பார்ப்பில் நவம்பர் 14-ம் தேதியான நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது..
ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்ப்பார்ப்புக்கு இடையில் அத்தனை கணிப்புகளையும் மீறி பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது.. எதிரணியில் நின்ற மகாகத்பந்தன் கூட்டணி 31 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று படுதோல்வியை சந்தித்தது..
பிஹாரில் இண்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் போராடி வெற்றிபெற்றார். லாலு பிரசாத் குடும்பத்தின் பாரம்பரியமான ராகோபூர் சட்டமன்றத் தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை தக்க வைத்துக் கொண்டார்.
தேர்தல்ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, பாஜக வேட்பாளர் சதீஷ் குமாரை 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் தேஜஸ்வி யாதவ் வெற்றி கொண்டார். ராகோபூர் தொகுதியில், தேஜஸ்வி கடந்த 10ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறார். 2015 மற்றும் 2020 தேர்தல்களிலும் சதீஷ் குமாரை தோற்கடித்திருந்தார். இந்தத் தேர்தல் முடிவும் அதையே மீண்டும் உறுதிசெய்கிறது.