இந்தியா

கொரோனா ஊரடங்கால் பழங்குடியின குழந்தைகளுக்கு அதிகரித்துள்ள ஊட்டச்சத்து குறைபாடு

sharpana

கொரோனா ஊரடங்கால் மஹாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்துள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.        

கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மஹாராஷ்டிர மாநிலம்தான் இந்தியாவிலேயே அதிகம் கொரோனா பாதித்த மாநிலமாக திகழ்கிறது. அதனால், அங்கு கொரோனா பரவாமல் இருக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.கடந்த ஆறு மாதமாக கொரோனா ஊரடங்கால் இந்தியாவின் பெரும் நிறுவனங்களும், அதன் தொழிலாளர்களுமே வேலை வாய்ப்பை இழந்து வரும்போது, ஏழைகளின் துயரத்தை சொல்லவும் வேண்டுமா?

அப்படித்தான், மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்திலுள்ள தரல்படா கிராமத்தில் வாழ்ந்துவரும் பழங்குடியின மக்கள் வேலையிழந்து வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கிறார்கள். கொரோனாவுக்கு முன் தங்கள் வறுமையைப் போக்கிக்கொள்ள அருகிலிருக்கும் தானே உள்ளிட்ட நகர்புறங்களில் பணிபுரிந்து வந்தவர்கள், தற்போது ஊரடங்கால கிராமங்களிலேயே வேலையிழந்து வருமானம் இழந்து உணவிற்கே தவித்து வருகிறார்கள். இதனால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடுடையோர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டாயிரத்து 399 ஆக இருந்த எண்ணிக்கை ஜூன் மாதத்தில் இரண்டாயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜவஹர் தாலுக்காவில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் 600 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 682 பேராக உயர்ந்துள்ளது.

”பள்ளிச் செல்லும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதால் அங்கு மதிய உணவான சாப்பாடு, பருப்பு, காய்கறி என்று சத்தான உணவை உட்கொள்வார்கள். ஆனால், இப்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் எப்படி சத்துணவு அவர்களுக்கு கிடைக்கும்? எங்களிடம் குழந்தைகளுக்கு சத்தான உணவைக் கொடுக்க பணம் இல்லை. அதனை சம்பாதிக்க வேலையும் இல்லை. ஒரு நாளைக்கு இரண்டுவேளை உணவு கிடைப்பதே கடுமையாக உள்ளது. பெரியவர்களான நாங்கள் பசியை பொறுத்துக்கொள்வோம். ஆனால், குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்?” என்று கண்ணீரோடு கேள்வி எழுப்புகிறார்கள் பெற்றோர்கள்

இதுகுறித்து மஹாராஷ்டிர மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் யஷோமதி தாக்கூரிடம் கேட்டபோது, “இந்த மக்கள் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள். நாங்கள் அனைவருக்கும் உணவளித்துதான் வருகின்றோம்” கூறியுள்ளார்.