ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கையால் பிரதமர் மோடியின் செல்வாக்கு நாடு முழுவதம் அதிகரித்திருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கை முடிந்த டிசம்பர் 30-ஆம் தேதிக்குப் பிறகு ஜனவரி 9 ஆம் தேதி வரை நாடு முழுவதும் 19 மாநிலங்களில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது
இந்தியா டுடே ஆங்கில ஊடகத்தின் சார்பில் நடந்த கருத்துக் கணிப்பில், இப்போது மக்களவைத் தேர்தல் நடந்தால், பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 360 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 60 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 42 சதவிகித வாக்குகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 25 சதவிகித வாக்குகளும் கிடைக்கும் என்றும் பிற கட்சிகளுக்கு 33 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. தி வீக் மற்றும் ஹன்சா நிறுவனங்கள் நடத்தியுள்ள 5 மாநிலத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பில், உத்தரப் பிரதேசம், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கையால் பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. ஆகவே உத்தரப் பிரதேசம் மற்றும் கோவாவில் பாரதிய ஜனதா தனிப்பெரும் கட்சியாக இடம்பிடிக்கும் என்றும், உத்தரகாண்டில் அது பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.