சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பால் காணிக்கை பெட்டிகள் நிரம்பி வழிகின்றன.
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக தினசரி 60 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை அதிகரிப்பால் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையும் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக சபரிமலை சன்னிதானத்தை சுற்றிலும் பல இடங்களில் காணிக்கை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் ஐயப்பன் சன்னதி முன்பு பெரிய காணிக்கைப் பெட்டி உள்ளது. சன்னதி முன்பு வைக்கப்பட்டுள்ள பெரிய காணிக்கைப் பெட்டியில் செலுத்தும் காணிக்கை 'கன்வயர் பெல்ட் ' மூலம் காணிக்கை எண்ணும் மைத்திறகு தானாகவே சென்று விழும் வசதி செய்யப்பட்டுள்ளது.
சன்னிதானத்தின் மற்ற இடங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் மற்றும் காணிக்கைப் பெட்டிகள் நிறைந்ததும் அவற்றிலுள்ள பணம் மற்றும் நாணயங்கள் காணிக்கை என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எண்ணப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சபரிமலை சன்னிதானம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள காணிக்கை பெட்டிகள், உண்டியல்கள் அடிக்கடி நிரம்பி வழிகின்றன. இதையடுத்து நிரம்பிய உண்டியல்கள் மற்றும் காணிக்கைப் பெட்டியில் இருக்கும் பணம், நகை, மற்றும் நாணயங்கள் உள்ளிட்டவைகளை போலீசார், தேவசம்போர்டு நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் அள்ளப்பட்டு காணிக்கை எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.