தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், 5 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களைப் பற்றிய சுயவிவரங்கள், சொத்து மதிப்பு, கல்வித்தகுதி உள்ளிட்ட அடிப்படை விவரங்களை வேட்புமனு தாக்கலுடன் இணைத்து வழங்க வேண்டும் என்பது வழக்கமான நடைமுறை. வேட்பாளரின் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களையும் குறிப்பிட வேண்டும். இந்நிலையில், வேட்பாளர்கள் கடந்த 5 ஆண்டுகளில் தாக்கல் செய்த வருமான வரி கணக்கு விவரங்களையும் வேட்புமனுத் தாக்கலின்போது சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேட்பாளர் மட்டுமின்றி அவரது துணைவர், குடும்பத்தினரின் கடந்த 5 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. வேட்பாளரும், அவரது குடும்பத்தினரும் வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருக்கும் கணக்கு விவரங்கள், வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாடுகளில் வாங்கியுள்ள சொத்து விவரங்கள் ஆகியவற்றையும் வேட்புமனுத் தாக்கலில் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.