இந்தியா

அரசு வேலைகளுக்கே ஆள் எடுப்பதாக நூதன மோசடி : அலார்ட் செய்யும் வருமான வரித்துறை

EllusamyKarthik

தமிழ்நாட்டில் உள்ள வருமான வரித்துறைக்கு கண்காணிப்பாளர் - 01, தனி செயலாளர் - 01, ஆய்வாளர் - 02, உதவியாளர் - 03 ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடப்பதாக வாட்ஸ்அப்பில் சில தகவல்கள் உலா வருவதாக வருமானவரித் துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.

கடந்த அக்டோபர் 12 அன்று இது தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டதாகவும், அதில் இருந்து 60 நாட்களுக்குள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக தெரிவிக்கப்படுவது யாதெனில், 'தனி செயலாளர்' பதவி முழுக்க முழுக்க பதவி உயர்வின் அடிப்படையில் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, இந்தப் பதவிக்கு நேரடி பணி நியமனம் இல்லை. 'ஆய்வாளர் மற்றும் வரி உதவியாளர்' பதவிகளுக்கான ஆட்சேர்ப்பைப் பொருத்தவரையில், பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மட்டுமே இது நடைபெறுகிறது. மேலும், 'கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர்' ஆகிய பதவிகள் வருமானவரித் தறையில் இல்லை என்று தெளிவுபடுத்தப்படுகிறது.

எனவே, வருமானவரித் துறையில் ஆட்சேர்ப்பு நடத்துவதாக வெளியாகியுள்ள அறிவிக்கை போலியானது என்றும், வருமான வரித் துறையால் அது வெளியிடப்படவில்லை என்றும் தெளிவு படுத்தப்படுகிறது. பொதுவாக, வருமானவரித் துறையில் உள்ள அரசிதழ் சாராத பல்வேறு பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

இது தொடர்பாக பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் சரிபார்த்துக் கொள்ளும் படியும், ஆட்சேர்ப்பு குறித்த சந்தேகங்கள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் ஆணையத்தின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளும் படியும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாட்ஸ்அப்பில் பரவும் இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் வருமானத் துறை எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வருமான வரித் துறையின் கூடுதல் வருமான வரித்துறை ஆணையர் திரு பி திவாகர், (தலைமையகம்) (நிர்வாகம் & வரி செலுத்துவோர் சேவைகள்)  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத்  தகவலைத் தெரிவித்துள்ளார்.