Karnataka Election
Karnataka Election Twitter page
இந்தியா

மாமரத்தில் 1 கோடி ரூபாய் பறிமுதல்... கர்நாடகாவில் வருமான வரித்துறையினர் அதிரடி!

Prakash J

கர்நாடகா மாநிலத்தில், 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு, வரும் 10-ஆம் தேதி, ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. கட்சித் தலைவர்கள் பலரும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பிரசாரம் செய்து தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம், கடந்த சில வாரங்களாக, கர்நாடகாவில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகள் (எம்சிசி) அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இல்லாமல் பெரிய தொகையை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில் பிரபல தொழிலதிபர் சுப்ரமணிய ராய் வீட்டில் பல கோடி ரூபாய் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடி சோதனையில் வருமான வரித்துறையினர் இறங்கினர். இதில் வீட்டின் முன்பு இருந்த மாமரத்தின் மீது அட்டைப்பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த 1 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் புட்டூர் தொகுதியில் அஷோக் குமார் ராய் போட்டியிடுகிறார். இவரது சகோதரர்தான் சுப்ரமணிய ராய். இவருடைய வீட்டில் இருந்துதான் 1 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் பணத்தை, வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகத்தான் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்திருக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

கர்நாடக மாநிலம் முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்திவரும் சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பில் ரூபாய் நோட்டுகளும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.