உலக நாடுகளுக்கு இடையே சரக்கு போக்குவரத்தில் சுமார் 85% கடல் வழியாகவே நடைபெறுகின்றன. கடல் போக்குவரத்தில் கிழக்குலகையும் மேற்குலகையும் இணைக்கும் மையப்புள்ளியில் இந்தியா இருந்தாலும் இங்குள்ள 13 பெரிய துறைமுகங்கள் பிரமாண்டமான சரக்குக் கப்பல்கள் வந்து செல்ல ஏதுவானவதாக அதாவது ஆழமானதாக இல்லை.
இதனால் இந்தியாவிலிருந்து சரக்குகளை கொழும்பு, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இடங்களுக்கு சிறிய கப்பல்களில் கொண்டுசெண்டு அங்கிருந்து பெரிய கப்பல்கள் மூலம் மற்ற நாடுகளுக்கு எடுத்துச்செல்லும் நிலை உள்ளது. இதனால் இந்தியாவுக்கு பொருட்கள் வருவதிலும் இங்கிருந்து செல்வதிலும் தாமதங்கள் இருந்ததுடன் பெருமளவில் பொருளாதார இழப்பும் ஏற்பட்டு வந்தது. இந்த சூழலில்தான் கேரளாவில் திருவனந்தபுரத்தை ஒட்டி விழிஞத்தில் ஆழ்கடல் சரக்குப் போக்குவரத்து துறைமுகம் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இது சர்வதேச கடல் பாதையிலிருந்து சுமார் 10 கடல் மைல்கள் தொலைவில்தான் உள்ளது என்பது சாதகமான அம்சம். கேரள அரசு பெருமளவு முதலீட்டுடன் கூடிய இத்துறைமுகத்தை அதானி போர்ட்ஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. இனி 20 ஆயிரம் கன்டெய்னர்கள் கொண்ட பிரமாண்ட கப்பல்கள் உலகின் எந்த நாட்டிலிருந்தும் இந்தியாவை நேரடியாக அணுக முடியும். விழிஞ்சம் தவிர மஹாராஷ்டிர மாநிலம் வாத்வானிலும் ஆழ்கடல் சரக்குப்போக்குவரத்து துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டு வரகிறது. அந்தமானிலும் இதே போன்ற ஆழ்கடல் சரக்குப்போக்குவரத்து துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இவை முழுமையும் செயல்பாட்டுக்கு வரும் போது சர்வதேச சரக்குக்கப்பல் போக்குவரத்தில் இந்தியா முதன்மையான நாடுகளில் ஒன்றாக மாறும்.
முன்னதாக, விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா நிகழ்ச்சியில் தன்னுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பங்கேற்றது சிலருக்கு தூக்கமில்லாத இரவுகளை தரும் என பிரதமர் மோடி பேசியது கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்தது. தொடர்ந்து பேசிய பிரதமர், கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்க்கட்சி கூட்டணியின் தூண் ஆக விளங்குவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “கடல் தொழிலில் இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. தற்போது வரை இந்தியாவின் கடல் வழி வர்த்தகத்தில் 75% வெளிநாட்டுத் துறைமுகங்களையே சார்ந்துள்ளன. இனி பிறரை சார்ந்திருக்க வேண்டிய நிலை வராது. வெளிநாட்டு துறைமுகங்கள் மூலம் சரக்குப் போக்குவரத்தை நடத்திவந்ததால் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இவ்வளவு பெரிய துறைமுகத்தை கேரளாவில் அமைத்ததால் அதானி மீது குஜராத்தியர்களே ஏமாற்றம் கொண்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர், முதலமைச்சர் பினராயி விஜயன், மூத்த காங்கிரஸ் தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் ஆகியோர் பங்கேற்றனர். துறைமுகத்தை நிர்வகிக்க உள்ள தொழிலதிபர் கவுதம் அதானியும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.