இந்தியா

அயோத்தியில் 100 மீ உயரத்தில் ராமர் சிலை?

அயோத்தியில் 100 மீ உயரத்தில் ராமர் சிலை?

webteam

அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் 100மீட்டர் உயரமுள்ள ராமர் சிலையை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உலகிலேயே மிக உயரமான வல்லபாய் படேலின் சிலையை அவரது பிறந்தநாளன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் 100மீட்டர் உயரமுள்ள ராமர் சிலையை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளியன்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இதுகுறித்து அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

(உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் )

ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் 100மீட்டர் உயரமுள்ள ராமர் சிலை அமைக்கப்படும் என்றும், இந்த சிலை 36 மீட்டர் பீடத்தில் அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த சிலை அமைக்க மொத்தமாக ரூ.330 கோடி செலவாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில் இந்த அறிவிப்பை தீபாவளி தினத்தன்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உத்திரப்பிரதேச மாநில பாஜக தலைவர் மகேந்திர நாத் பாண்டே, யோகி ஆதித்யநாத் ஒரு துறவி. அதனடிப்படையில் அவர் அயோத்திக்காக ஏதாவது திட்டம் வைத்திருப்பார். அயோத்தியில் கோவில் தொடர்பாகவும் தீபாவளியில் நிச்சயம் நல்ல செய்தி ஒன்றை அவர் வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

(மகேந்திர நாத் பாண்டே)

மூத்த பாஜக நிர்வாகி ஒருவர் கூறும்போது, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அருங்காட்சியகம், விமான நிலையம், கலை அரங்கம் உள்ளிட்ட அறிவிப்புகளை கொடுத்து வருகிறார். அதன் வரிசையில் ராமர் கோவில் குறித்தும் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம். மிகப்பெரிய ராமர் சிலையின் அறிவிப்பும் அதில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.