திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு குடும்பத்தினருடன் வந்த ஒரு வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, தெளிவான புகைப்படக்காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம், அனந்தப்பூர் மாவட்டம், உருவகொண்டா கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 13 தேதி திருப்பதி வந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் சுவாமி தரிசனம் செய்தபின், கோயிலுக்கு வெளியே வந்த வெங்கடேஷ் குடும்பத்தினருடன் கோயில் எதிரே உள்ள மண்டபம் அருகே படுத்து உறங்கினார். 14 தேதி காலை 7 மணி அளவில் கண் விழித்து பார்த்தபோது அருகில் படுக்க வைத்திருந்த 1 வயது குழந்தை சென்னகேசவலு காணவில்லை. இதுகுறித்து திருமலையில் உள்ள போலீசில் வெங்கடேஷ் புகார் அளித்தார். போலீசார் வெங்கடேஷ் உறங்கி கொண்டிருந்த இடத்தில் வைக்கப்பட்ட சி.சி. டி.வி காட்சிகளை வைத்து பார்த்த போது குழந்தை சென்னகேசவலுவை ஒருவர் எடுத்து செல்வது தெரிய வந்தது. ஆனால் குழந்தையை கடத்தி சென்றவரின் முகம் சரியாக தெரியாததால் கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு கடும் சவாலாக மாறியது. இந்நிலையில் குழந்தை சென்னகேசவலுவை கடத்தி சென்ற தம்பதியர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்க்காக உள்ளே செல்லும் மகா துவாரம் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதை வைத்து போலீசார் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் ஊடகத்தின் மூலமாகவும் சமூக வலைதளத்தின் மூலமாகவும் குழந்தையை கடத்தி சென்றவர்களை பிடிக்க உதவி செய்ய வேண்டும் என போலீசார் கேட்டு கொண்டுள்ளனர். கடத்தி சென்ற தம்பதிகளை பார்த்தால் உடனடியாக திருப்பதி போலீஸ் வாட்ஸ் ஆப் எண் 80999 99977 தெரிவிக்கும்படி கேட்டு கொண்டுள்ளனர்.