இந்தியா

சாலையில் துப்பினால் துடைக்க வேண்டும்: புனே மாநகராட்சி அதிரடி

சாலையில் துப்பினால் துடைக்க வேண்டும்: புனே மாநகராட்சி அதிரடி

webteam

சாலையில் எச்சில் துப்பினால் அபராதம் செலுத்துவதுடன், அவரே அதை சுத்தம் செய்யவேண்டும் என புனே மாநகராட்சி அறிவித்துள்ளது.

புனே நகரை சுத்தமாக வைத்திருப்பதற்காக, அந்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக, சாலை யில் எச்சில் துப்புபவர்களை கண்டுபிடித்து அபராதமும், தண்டனையும் வழங்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் முதலில் புனே மாநகராட் சிக்கு உட்பட்ட பிப்வேவாடி வார்டில் செயல்படுத்தப்பட்டது. அதற்கு பலன் கிடைத்ததை அடுத்து, ஒரே வாரத்தில் மாநகராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி யாராவது சாலைகள், நடைபாதைகள், சுவர் உள்ளிட்ட இடங்களில் துப்பினால், அபராதம் கட்ட வேண்டும். இல்லை என்றால் அதை அவர்களே சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர் மற்றும் துடைப்பத்தை மாநகராட்சி ஊழியர்கள் கொடுப்பார்கள். இதற்காக சுகாதார ஆய்வாளர் கள் ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

இதுபற்றி புனே மாநகராட்சி பிப்வேவாடி வார்டின் உதவி கமிஷனர், அவினாஷ் சக்பால் கூறும்போது, ‘எங்கள் திட்டம் நகரத்தின் அனைத்து பகுதிக்கும் விரிவுபடுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்திட்டம் நகரத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவும்.

அதோடு மக்களிடையே ஒழுக்கத்தை கற்றுத்தரும் விதமாகவும் இருக்கும். முதல் நாளில் சாலையில் துப்பிய 20 பேரை பிடித்து அபாரதம் கட்ட சொன்னோம். மறுத்தவர்களிடம் சுத்தம் செய்ய சொன்னோம். இந்த கண்காணிப்பு தொடரும்’ என்றார்.

இந்தாண்டு வெளியான சுத்தமான நகரங்கள் பட்டியலில் இந்தூர் முதல் இடத்திலும் புனே  10-வது இடத்திலும் இருந்தது.