இந்தியா

தொடரும் ரெய்டுகள், கைதாகும் தலைவர்கள்..குறிவைக்கப்படுகிறதா எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்!

JustinDurai

இதுவரை எந்தெந்த மாநிலங்களில், யார் யார் மீது விசாரணை அமைப்புகளால் ரெய்டு நடத்தப்பட்டுள்ளன என்கிற விவரம் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக அமலாக்கத் துறை இயக்குநரகம், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ரெய்டுகள் நடத்தி வருகின்றன.  இதில் பலர் மீது வழக்கு பதியப்பட்டு கைது நடவடிக்கைகள், விசாரணைப் படலம் என தொடர்கிறது. அண்மையில்கூட, விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டி, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடிதம் எழுதின. இந்நிலையில் இதுவரை எந்தெந்த மாநிலங்களில், யார் யார் மீது விசாரணை அமைப்புகளால் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

மகாராஷ்டிரா - சஞ்சய் ராவத்:

சிவசேனா எம்.பி.யான சஞ்சய் ரவுத், நில ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உள்ளானர். தற்போது அவர் அமலாக்கத்துறையினரின் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

டெல்லி - சத்யேந்தர்:

ஹவாலா பணப் பரிவா்த்தனை செய்ததாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி சுகாதாரத் துறை அமைச்சருமான சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

மேற்கு வங்கம் - பார்த்தா சாட்டர்ஜி:

பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் மேற்கு வங்க மாநில முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவருக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜி ஆகியோர் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

ராஜஸ்தான் - அக்ரசென் கெலாட்:

உர ஏற்றுமதி ஊழல் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ரசென் கெலாட் மற்றும் பிறருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கேரளா:

தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளா் உள்ளிட்ட சிலர் மத்திய முகமைகளின் விசாரணையில் உள்ளனர்.

இதையும் படிக்க: சாலை தடுப்பில் மோதி அந்தரத்தில் தொங்கும் கார் - வாகன ஓட்டிகள் அச்சம்