இந்தியா

மாயமானதா 540 கோடியில் கட்டப்பட்ட 4.5 லட்சம் கழிவறைகள்?

மாயமானதா 540 கோடியில் கட்டப்பட்ட 4.5 லட்சம் கழிவறைகள்?

webteam

மத்தியப் பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 540 கோடியில் கட்டப்பட்டதாக கூறப்பட்ட 4.5 லட்சம் கழிவறைகள் மாயமானதாக புகார் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் திறந்தவெளி கழிவறைகளை அகற்றும் நோக்கத்தோடு பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்தார். அதனடிப்படையில் மத்தியப் பிரதேசத்தில் 540 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4.5 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டதாக கூறப்பட்டது. அதற்காக புகைப்படங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால் அந்த கழிவறைகள் எங்கு இருக்கின்றன என்று கண்டுபிடிக்க முடியவில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும் 540 கோடி ரூபாய் கழிவறை திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கலாம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கழிவறை கட்டுமானத்திற்கான ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்கள் உண்மையில் வேறு இடங்களில் எடுக்கப்பட்டவையாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை பக்கத்து வீடுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களாகவும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கிராமவாசிகள் சிலர் தங்கள் பெயரில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது தங்களுக்கே தெரியாது என்று பஞ்சாயத்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அரசாங்க பதிவுகளில், அவர்களின் வீடுகளில் கழிவறைகள் இருப்பது மட்டுமல்லாமல், அரசாங்க முன் பலகையில் அவர்களுடைய புகைப்படங்களும் உள்ளன.

இதுகுறித்து பெதுல் பஞ்சாயத்து நிர்வாகி தியாகி கூறுகையில், “புகார்கள் உண்மை என்று கண்டறியப்பட்டுள்ளது. இழந்த தொகையை மீட்கும் பணியில் அரசு செயல்படுகிறது. தொகையை மீட்கும் பணி முடிந்ததும், ஐபிசியின் கீழ் நடவடிக்கைகளைத் தொடங்குவோம். பஞ்சாயத்தால் மேற்கொள்ளப்பட்ட மற்ற அனைத்து வேலைகளையும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து ஸ்வாச் பாரத் திட்டத்தின் (கிராமப்புற) மத்தியப் பிரதேச துணை இயக்குநர் அஜித் திவாரி கூறுகையில், “2012-ஆம் ஆண்டில், ஒரு அடிப்படை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மாநிலத்தில் கழிவறைகள் இல்லாத 62 லட்சத்திற்கும் மேற்பட்ட, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன. அக்டோபர் 2, 2018 அன்று, இந்த கழிவறைகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டன. ஆனால் அந்த கழிவறைகள் உண்மையில் உள்ளனவா என்பதையும், 100% கட்டி முடிக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிசெய்யவும் 21,000 தன்னார்வலர்களை பயன்படுத்தி ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டோம். இந்த கணக்கெடுப்பில் சுமார் 4.5 லட்சம் கழிவறைகளை காணவில்லை” எனக் குறிப்பிட்டார்.

மேலும், “அரசாங்கத்தால் கட்டப்பட்ட கழிவறைகள் அல்லது சொத்துகள் உண்மையில் இருப்பதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம். தரவு பொது தளத்தில் வைக்கப்படும். இதனால் பயனாளிகள் எந்தவொரு முறைகேட்டையும் அறிந்துகொள்ள முடியும்.” எனத் திவாரி தெரிவித்தார்.