சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா, நீதிமன்றம் விதித்த 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறையில் இருக்க நேரிடும் என்று தெரியவந்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில், 2014-ஆம் ஆண்டு தண்டனையை அறிவித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு அபராதமும் விதித்தது. தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
2017 பிப்ரவரி மாதத்திலிருந்து சிறையில் உள்ள இந்த மூவரும், இதுவரை அபராதத் தொகையை செலுத்தவில்லை என்று சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சசிகலா அபராதம் செலுத்தாத நிலையில், அவர் கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சிறை தண்டனை காலம் முடிவதற்கு முன்னதாகவே சசிகலா வெளியே வரக்கூடும் என்ற செய்தியும் பரவுகிறது. ஆனால் இந்தத் தகவலை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். சசிகலா உள்ளிட்ட மூவரும் அபராதத் தொகையை சரியாக செலுத்தும்பட்சத்தில் ஜனவரி 25, 2021 அன்று வெளிவரக் கூடும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு முன்னதாக, விடுதலைக்கு வாய்ப்பில்லை எனவும் அவர்கள் தெரிவித்துவிட்டனர்.