இந்தியா

கேரளாவில் குறையத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு

JustinDurai
கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் கடுமையாக பரவி வந்த நிலையில் சிறிது குறைந்து மீண்டும் 20 ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளது.
கேரளாவில் தினசரி பாதிப்பு 13 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்து வந்தது. அதன் பின்னர் மருத்துவக் குழுவினர் எச்சரிக்கையையும் மீறி சுற்றுலா தலங்கள் திறப்பு, ஓணம் பண்டிகைக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் படிப்படியாக தொற்று பாதிப்பு அதிகரித்தது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தையும் தாண்டி பதிவானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் மாநில அரசு மீது கடும் விமர்சனம் எழுந்ததையடுத்து சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் எதிரொலியாக 2ஆவது நாளாக தொற்று குறைந்து நேற்று 19 ஆயிரத்து 622 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். எனினும் தொற்று பரவல் விகிதம் 16 புள்ளி 74 ஆக உள்ளது. மேலும் 132 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர், 2 லட்சத்து 9 ஆயிரத்து 493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.