இந்தியா

கேரளாவில் மழை பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 23 பேர் உயிரிழப்பு

JustinDurai
கேரளாவில் நிலச்சரிவு உள்ளிட்ட மழை பாதிப்புகளில் ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 10 மாவட்டங்களில் கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருந்த நேரத்தில் கேரளாவில் திடீரென கனமழை கொட்டியது. இதனால் இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட மழை பாதிப்புகள் காரணமாக நேற்று ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். திருவனந்தபுரத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் பிறந்து 22 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை உட்பட 6 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்களை பேரிடர் மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர். இதேபோன்று பல்வேறு பகுதிகளிலும் மீட்புப்பணி தொடர்கிறது.
இதனிடையே 10 மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கன மழையால் கோட்டயம் மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.