இந்தியா

ஹரியானாவில் 2 பேர் உயிரோடு எரித்துக் கொலை - பசு காவலர்களுக்கு தொடர்பு?

JustinDurai

இருவரின் கொலைக்கு பின்னணியில் பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள காட்மீகா கிராமத்தை சேர்ந்த நசீர் (27), ஜுனைத் என்கிற ஜூனா (35) ஆகிய இருவரும் காணாமல் போனதாக கடந்த புதன்கிழமை உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.

இந்நிலையில் ஹரியானா அருகே பிவானியில் கார் ஒன்றில் எரிந்த நிலையில் இரு ஆண் சடலங்கள் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. விரைந்து வந்த போலீசார் காரில் இருந்த சடலங்களை மீட்டு, இறந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரித்தனர். விசாரணையில், காணாமல்போன நசீர் மற்றும் ஜுனைத் ஆகிய இருவரின் சடலங்கள்தான் அவை என்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர்கள் எரித்து கொல்லப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

ஜூனைத் என்பவர் மாடுகளை இறைச்சிக்காக அனுப்பும் வேலையை செய்து வந்ததாகவும், இருவரின் கொலைக்கு பின்னணியில் பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். பசுக் காவலர்களால் அரங்கேற்றப்பட்ட கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து பாரத்பூர் காவல் கண்காணிப்பாளர் ஷியாம் சிங் கூறுகையில், ''பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பேர் மீது கோபால்கர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.  குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

ராஜஸ்தானின் பரத்பூரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹரியானாவின் பிவானிக்கு அழைத்து வந்து கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நசீர் மற்றும் ஜுனைத் ஆகிய இருவரும் எரித்துக் கொல்லப்பட்ட காரின் உரிமையாளர் அசீன் கான் என அடையாளம் காணப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.