ஏர் இந்தியா எக்ஸ் தளம்
இந்தியா

விமானத்தில் பயணம் செய்யும் போதும் இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி – ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகம்

இப்போது நீங்கள் விமானத்தில் பயணம் செய்யும் போதும் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். விமானத்தில் பயணித்தவாறே ஆபீஸ் வேலையை முடிக்கலாம். அப்படி ஒரு வசதியை ஏர் இந்தியா நிறுவனம் கொண்டு வந்துள்ளது. என்ன விஷயம் என விரிவாக பார்க்கலாம்.

திவ்யா தங்கராஜ்

ஏர் இந்தியா விமானம் IN FLIGHT WIFI SERVICE என்ற புதிய அம்சத்தை உள்ளாட்டு விமானங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் விமான பயணங்களின் போதும் இணையதள வசதியை பயணம் செய்பவர்கள் பயன்படுத்தலாம். இந்த வசதியை அறிமுகப்படுத்தியதன் மூலம் தனது போட்டி நிறுவனங்கள் மத்தியில் ஏர் இந்தியா நிறுவனம் தனித்து காணப்படுகிறது. இனி விமானத்தில் பயணம் செய்யும்போது மெசேஜ் செய்து கொள்ளலாம், சோசியல் மீடியாக்களில் போஸ்ட் செய்யலாம் மற்றும் அலுவலக மெயில்களை செக் செய்யலாம்.

இன்டர்நெட் வசதி

இந்த சேவை தற்போது ஏர் இந்தியாவின் ஏர்பஸ் A350, போயிங் 787-9 மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஏர்பஸ் A321neo விமானங்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த இலவச சேவை விமான பயணிகள் தங்கள் லேப்டாப், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட வை-ஃபை மூலம் இயங்கும் அனைத்து கருவிகளிலும் பயன்படுத்த முடியும். இதற்கான சோதனை முயற்சியை ஏர் இந்தியா விமானம் சர்வதேச விமானங்களில் முயற்சித்தது. அதனை தொடர்ந்து தற்போது உள்நாட்டு விமானங்களில் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. விமானம் 10,000 அடி உயரத்திற்கு மேல் பறக்கும்போதே இணைய சேவையை பெற முடியும்.

ஏர் இந்தியா விமானத்தின் இந்த முயற்சி wifi கிடைக்கும் தன்மை, செயற்கைக்கோள் இணைப்பு, ஸ்பெக்ட்ரம் பேண்ட்வித் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து வருங்காலத்தில் இது எப்படி செயல்படும் என தெரியவரும். சரி இதனை எப்படி பயன்படுத்த முடியும்? மொபைல், டேப்லெட் அல்லது லேப்டாப்பில் wifi செட்டிங்கை எடுத்து அதில் Air India Wi-Fi’ network-ஐ தேர்வு செய்யவேண்டும். அதில் PNR number மற்றும் கடைசி பெயரை கொடுக்க வேண்டும். அவ்வளவுதான் நீங்கள் விமானத்தில் இருந்தபடியே இணைய சேவையை பயன்படுத்தலாம்.