டெல்லி சட்டமன்ற தேர்தல் முகநூல்
இந்தியா

மகளிர் வாக்குகள்தான் பாஜகவுக்கு மகுடத்தை பரிசளித்ததா? முக்கியமான 3 காரணங்கள்!

டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பிரம்மாண்ட பெரும்பான்மையை பெற்றதில் மகளிர் ஆதரவு முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

கணபதி சுப்ரமணியம்

டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பிரம்மாண்ட பெரும்பான்மையை பெற்றதில் மகளிர் ஆதரவு முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. டெல்லியின் 1.56 கோடி வாக்காளர்களில், 72.36 லட்சம் மகளிர் என்பதும் அவர்களது வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும் அனைவரும் அறிந்ததே.

மூன்று முக்கிய காரணங்களால் மகளிர் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கடைப்பிடித்தனர் என மூத்த அரசியல் தலைவர்கள் கருதுகின்றனர். இதில் முக்கியமானது ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கையால் டெல்லியில் அதிகரித்த மதுக் கூடங்களின் எண்ணிக்கை மகளிர் வாக்குகள் பாஜகவிற்கு செல்ல ஒரு காரணம் என டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய மதுபான விநியோக கொள்கையால் ஒரு மது கடை இருந்த பகுதியில் தற்போது மூன்று அல்லது நான்கு மது கடைகள் முளைத்திருக்கின்றன. இதனால் ஆண்கள், குறிப்பாக தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை மக்கள், மதுவை நுகர்வது அதிகரித்துள்ளது எனவும் இதன் பாதிப்பை மகளிரே சுமக்கின்றனர் எனவும் இதற்கான காரணம் விளக்கப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த சமயத்தில், புதிய மதுபான விநியோக கொள்கை கொண்டுவரப்பட்டு அதன் மூலம் மது கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட போது "ஒரு பாட்டில் வாங்கினால் இன்னொரு பாட்டில் இலவசம்" போன்ற மதுப்பழக்கத்தை அதிகரிக்கும் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் மதுபான விநியோக கொள்கை அமல்படுத்தப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டு அரவிந்த் கெஜ்ரிவால், அப்போதைய துணை முதல்வர் மணிஷ் சிசோதியா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் சிறை சென்றனர். இந்த ஊழல் வழக்கு காரணமாக ஆம் ஆத்மி கட்சி ஊழல் கட்சி என மக்கள் மத்தியில் எண்ணம் பரவியது.

அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா

அடுத்ததாக மகளிர் உதவித்தொகை வாக்குறுதி டெல்லி சட்டசபை தேர்தலில் முக்கிய அம்சமாக இருந்ததாக கருதப்படுகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால், மகளிருக்கு மாதம் 2100 உதவித்தொகை வழங்கப்படும் என அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்திருந்தார். பாரதிய ஜனதா கட்சி அதைவிட ஒரு படி மேலே சென்று எங்களுடைய ஆட்சியில் மகளிருக்கு மாதம் 2500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. காங்கிரஸ் கட்சியும் அதே வாக்குறுதியை அளித்தாலும், பாஜக தனது வாக்குறுதியை அமல்படுத்தும் என டெல்லி மகளிர் கருதியதால் அவர்களில் பெரும்பாலோர் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

இலவச குடிநீர் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் பலமுறை அறிவித்த நிலையில், சரியான குடிநீர் விநியோகமே இல்லை என மகளிர் புகார் அளித்து வந்தனர். மேலும் விநியோகிக்கப்படும் குடிநீர் சுத்தமாக இல்லை என்பதும் அவர்களுடைய புகாராக இருந்தது. பொதுவாக குடிசை பகுதிகளில் உள்ள ஏழை இல்லங்களில், மகளிரே குடிதண்ணீருக்கு பொறுப்பாக இருப்பதால் அவர்களுடைய கோபம் ஆம் ஆத்மி கட்சிக்கு பாதகமாக முடிந்துள்ளது.

சாலை விளக்குகள் சரியாக எரிவதில்லை எனவும் இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது எனவும் தொடர்ச்சியாக புகார்கள் வெளிவந்ததும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக மகளிர் வாக்குகள் அமைய காரணமாக அமைந்ததாக கருதப்படுகிறது. இப்படி பல்வேறு காரணங்களால், மகளிர் -- குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியின் கோட்டை என கருதப்படும் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மகளிர் -- தங்கள் ஆதரவை பாஜக பக்கம் திருப்பி தாமரைக்கு மகுடத்தை அளித்துள்ளனர்.