இந்தியா

வாகன வெளிச்சத்தில் தேர்வெழுதிய 12-ம் வகுப்பு மாணவர்கள் - பீகாரில் அதிர்ச்சி சம்பவம்

சங்கீதா

பீகாரில் தேர்வு மையத்தில் மின்சாரம் இல்லாததால், வாகனங்களின் வெளிச்சத்தில் 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் கிழக்கு சாம்பரான் மாவட்டத்தில் மோதிஹாரி நகரில் அமைந்துள்ளது மகாராஜா ஹரேந்திர கிஷோர் சிங் கல்லூரி. இந்தக் கல்லூரியில் கடந்த செவ்வாய்கிழமை அன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இடைத் தேர்வு நடைபெற்றது. சுமார் 400 மாணவர்கள் இந்தி இடைத்தேர்வை எழுத வந்தனர். ஆனால் தேர்வு மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது, கடைசி நேரத்தில் இருக்கைகள் ஒழுங்கு செய்வதில் ஏற்பட்ட குழப்பம் உள்ளிட்ட காரணங்களால், தேர்வெழுத வந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், மாலை 4.30 மணி வரை மாணவர்களுக்கு விடைத்தாள்கள் கொடுக்கப்படவில்லை. பின்னர், அவர்களை கல்லூரி நிர்வாகம் சமாதானம் செய்து தேர்வெழுத அழைத்து வந்தனர். வழக்கமாக தேர்வு 1.45 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு நிறைவடைய வேண்டும். ஆனால் போராட்டம் காரணமாக 4.30 மணிக்குத் தான் தேர்வு தொடங்கியது.

மாணவர்கள் தேர்வு எழுதி கொண்டிருந்த சமயத்தில், 6 மணிக்கு இருட்டத் தொடங்கியதும் தான், கல்லூரியில் மின்சார சேவை இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து கல்லூரி தரப்பில் ஜெனரேட்டர் கொண்டு வந்தாலும், அது அனைத்து வகுப்புகளுக்கும் போதவில்லை. இதனால், மாணவர்களை அழைத்து வந்த பெற்றோர், தங்களது கார், இருசக்கரம் உள்ளிட்ட வாகனங்களின் முகப்பு விளக்கை எரிய விட்டு, தேர்வு மைய வராண்டாவில் அமர வைத்து மாணவர்களை தேர்வெழுத வைத்தனர். 4.30 மணிக்கு துவங்கிய தேர்வு, இரவு 8 மணி வரை நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் புகார் அளித்ததை அடுத்து, மாவட்டக் கல்வி நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, அம்மாநில கூடுதல் தலைமை செயலாளர் சஞ்சய் குமார் கூறுகையில், மாவட்ட அதிகாரிகளிடம் இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பீகார் மாநில கல்வித்துறை அமைச்சர் விஜய் குமார் சௌத்ரி தெரிவிக்கையில், “வாகன விளக்கு வெளிச்சத்தில் மாணவர்கள் தேர்வெழுதிய விவகாரம் குறித்து அறிக்கை கேட்டுள்ளேன். அந்த அறிக்கை வந்தப் பின்னரே கருத்து தெரிவிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.