வெளிமாநிலங்களில் இருந்து பீகாருக்கு வந்து சொந்த ஊருக்குத் திரும்பும் தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசு ஆணுறைகளை வழங்கி வருகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 60 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு தொடங்கப்பட்ட நாட்களில் இருந்து போக்குவரத்து இல்லாததால் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் நடந்தே சொந்த ஊர் திரும்பினர். இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்குச் சென்றாலும், அந்தந்த மாநிலங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அதன் பிறகே அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் வீடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசு ஆணுறைகளை வழங்கி வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள பீகார் மாநில சுகாதாரத்துறை, தனிமைப்படுத்தப்பட்டு வீடு திரும்புபவர்களுக்கு ஆணுறைகள் வழங்கப்படுகின்றன.
திட்டமிடப்படாத தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது குறித்து அவர்களுக்கு உரிய அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதும் சுகாதாரத்துறையின் கடமைதான் எனத் தெரிவித்துள்ளது. NGO உதவியுடன் பீகார் அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.