உலகம் முழுவதும் நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, குஜராத் மாநிலம் நவ்சரி மாவட்டத்தில் நாளை (மார்ச் 8) நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். குஜராத்திற்கு பிரதமர் மோடி செல்வதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த விழாவிற்கான பாதுகாப்புப் பணிகளில் முழுவதுமாக காவல்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஈடுபடவுள்ளனர். பிரதமர் மோடி வருகை முதல் அவர் கலந்துகொள்ளும் விழா நிறைவுபெறும் வரை பெண் காவலர்கள் பணியில் ஈடுபட உள்ளதாக குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ”சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குஜராத் காவல்துறை ஒரு தனித்துவமான புதிய முயற்சியை முன்னெடுக்கிறது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக, நவ்சாரியில் உள்ள வான்சி போர்சி கிராமத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் பிரதமரின் வருகை முதல் நிகழ்வு நடைபெறும் இடம் வரை, அவரது நிகழ்வின் முழு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பெண் காவல்துறையினர் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். 2,100-க்கும் மேற்பட்ட காவலர்கள், 187 உதவி ஆய்வாளர்கள், 61 ஆய்வாளர்கள், 16 டிஎஸ்பி, 5 எஸ்பிக்கள், ஒரு ஐ.ஜி., ஒரு கூடுதல் டிஜிபி அந்தஸ்து அதிகாரி என அனைவரும் பெண்களே பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இந்த முயற்சி மகளிர் தினத்தன்று உலகிற்கு ஒரு வலுவான செய்தியை வழங்கும். மேலும் குஜராத்தை பாதுகாப்பான மாநிலமாக மாற்றுவதில் பெண்கள் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதையும் இது வெளிப்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த மாதம் 23ஆம் தேதி, ’மனதின் குரல்’ (மன்கிபாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, “நமது நாட்டை பெண்களின் சக்தி வலுப்படுத்தும். தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களை ஊக்குவிக்கும் விதமாக எனது சமூக வலைதள கணக்குகள் ஒருநாள் பெண்களிடம் ஒப்படைக்கப்படும். மகளிர் தினத்தன்று மோடியின் சமூக வலைதள பக்கங்களில் மகளிர் தங்களுடைய பதிவுகளை பகிரலாம்” எனத் தெரிவித்திருந்தார்.