இந்தியா

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு இதுவரை 355 கோடி

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு இதுவரை 355 கோடி

rajakannan

பிரதமராக பொறுப்பேற்றது முதல் நரேந்திர மோடி 52 நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கான செலவு ரூ.355 கோடி என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமராக 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மோடி 41 முறை வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். இதுவரை 165 நாட்கள் வெளிநாடுகளில் மோடி தங்கியுள்ளார். இதில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா நாடுகளில் பிரதமர் மோடி மேற்கொண்ட சுற்றுப் பயணத்திற்கு ரூ31.25 கோடி செலவானது. அதேபோல், பூடான் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுப் பயணத்திற்கு ரூ.2.45 கோடி செலவானது.

பெங்களூருவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் பிம்மப்பா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பிரதமர் அலுவலகத்திடம் இருந்து இந்தத்  தகவலை வெளிக் கொண்டு வந்துள்ளார். இருப்பினும், பிரதமர் மோடி உள்நாட்டில் மேற்கொண்ட பயணங்கள் குறித்த தகவல்களை தர பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பிரதமரின் உள்நாட்டு பயணங்கள் மற்றும் பயணங்களின் போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான செலவுகள் குறித்த தகவல்கள் எனக்கு அளிக்கப்படவில்லை. பாதுகாப்பு குறித்த தகவல்களை நான் கேட்கவில்லை. பாதுகாப்புக்கான செலவுகளைதான் கேட்டேன். ஆனால் அவர்கள் தர மறுத்துவிட்டார்கள்” என்றார். 

மேலும் அவர் கூறுகையில், “தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இந்தத் தகவல்களை பெறவில்லை. மக்கள் இதனை அறிந்து கொள்ள வேண்டும் என விரும்பினேன். நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். வெளிநாட்டு சுற்றுப் பயணங்களால் நாடு அடைந்த பலன்கள் குறித்த தகவல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்” என்று பிம்மப்பா தெரிவித்தார்.

பிரதமர் அலுவலக இணையதளத்தில் மோடி 48 மாதங்களில் எந்தெந்த நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் என்பது குறித்த தகவல்களை பதிவிட்டுள்ளது. பிரதமர் மோடி வெளிநாடுகளில் அதிக சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.